கயத்தாறில் மூதாட்டியிடம் 4 பவுன் தாலி சங்கிலி பறித்த 2 பட்டதாரிகள் கைது


கயத்தாறில் மூதாட்டியிடம் 4 பவுன்  தாலி சங்கிலி பறித்த 2 பட்டதாரிகள் கைது
x
தினத்தந்தி 29 Oct 2021 5:09 PM IST (Updated: 29 Oct 2021 5:09 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறில் மூதாட்டியிடம் 4 பவுன் தாலி சங்கிலி பறித்த 2 பட்டதாரிகள் கைது செய்யப்பட்டனர்

கயத்தாறு:
கயத்தாறில் மூதாட்டியிடம் 4 பவுன் தாலி சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பட்டதாரிகளை போலீசார் துரத்தி சென்று 2 மணி நேரத்தில் கைது செய்தனர்.
 தாலி சங்கிலி பறிப்பு
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சாலைபுதூர் கிராமத்தை சேர்ந்த சண்முகையா என்பவரின் மனைவி காளியம்மாள் (வயது 60). நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு காளியம்மாள் மற்றும் அவரது உறவினர் ஒருவரும் பக்கத்து கிராமமான தெற்கு இலந்தைக்குளத்தில் உள்ள ரேஷன் கடையில் சாமான்கள் வாங்கி விட்டு ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
நாற்கர சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்துள்ளனர். திடீரென்று மோட்டார்சைக்கிள் பின்னால் உட்கார்ந்திருந்த வாலிபர், காளியம்மாள் கழுத்தில் கிடந்த 4 பவுன் தாலி சங்கிலியை பறித்தார். அதிர்ச்சி அடைந்த காளியம்மாளும், உறவினரும் சத்தம் போட்டனர்.
அதற்குள் சங்கிலியை பறித்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை நான்கு வழிச்சாலையில் வேகமாக தப்பி விட்டனர்.
விரட்டி சென்று பிடித்த போலீசார்
இதுகுறித்து உடனடியாக கயத்தாறு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோணிதீலிப் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரனை நடத்தினர். வழிப்பறி செய்த வாலிபர்கள் தப்பி சென்ற பகுதியில் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
புளியம்பட்டி அருகே தப்பி சென்று கொண்டிருந்த வாலிபர்களின் மோட்டார் சைக்கிளை போலீசார் மறித்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் மீண்டும் வேகமாக சென்றனர். போலீசார் வாகனத்தில் பின்தொடர்ந்து விரட்டினர். சுமார் 6 கி.மீ. தூரத்திலுள்ள வேப்பங்குளம் அருகே மோட்டார் சைக்கிளை கீழே போட்டு விட்டு, அருகிலுள்ள வயற்காட்டு வழியாக 2 வாலிபர்களும் தப்பி ஓடினர்.
பட்டதாரிகள் கைது
போலீசாரும் வயற்காட்டில் இறங்கி சுமார் 1 கி.மீ. தூரம் விரட்டி சென்று 2 பேரையும் மடக்கி பிடத்தனர். அந்த 2 பேரிடமும் கயத்தாறு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், இருவரும் பட்டதாரிகள் என தெரிய வந்தது. மேலும், அவர்களில் ஒருவர் தூத்துக்குடி முத்தையாபுரம் குமாரசாமி நகர் பகுதியை சேர்ந்த சுடலைமணி மகன் நயினார் (22),  தூத்துக்குடி அத்திமரபட்டி வடக்கு தெருவை சேர்ந்த குருசாமி மகன் மாடசாமி (21) என்றும், இருவரும்  குரும்பூர், தென்திருப்பேரை,  கயத்தாறு உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் மோட்டார் சைக்கிளில் சென்று பெண்களிடம் சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
அந்த 2 ேபரிடம் இருந்து மூதாட்டியின் 4 பவுன் தாலி சங்கிலி மீட்கப்பட்டது. இது தொடர்பாக கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர்.
மேலும் 9 பவுன் மீட்பு
தொடர் விசாரணையில் மற்ற இடங்களில் அவர்கள் வழிப்பறி செய்த மேலும் 9 பவுன் நகைகளையும் போலீசார் மீட்டனர்.
மூதாட்டியிடம் வழிப்பறி செய்த பட்டதாரி வாலிபர்களை சுமார் 2 மணி நேரத்தில் விரட்டி பிடித்து நகையை மீட்ட போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.


Next Story