ஆண்டிப்பட்டி அருகே அரசு பஸ்கள் நேருக்குநேர் மோதல்; டிரைவர்கள் உள்பட 32 பேர் படுகாயம்


ஆண்டிப்பட்டி அருகே அரசு பஸ்கள் நேருக்குநேர் மோதல்; டிரைவர்கள் உள்பட 32 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 29 Oct 2021 7:39 PM IST (Updated: 29 Oct 2021 7:39 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே அரசு பஸ்கள் நேருக்குநேர் மோதியதில், டிரைவர்கள் உள்பட 32 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே  அரசு பஸ்கள் நேருக்குநேர் மோதியதில், டிரைவர்கள் உள்பட 32 பேர் படுகாயம் அடைந்தனர்.
அரசு பஸ்கள்
தேனியில் இருந்து நெல்லைக்கு நேற்று காலை 8.15 மணிக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சில் சுமார் 50 பயணிகள் இருந்தனர். இந்த பஸ்சை நெல்லையை சேர்ந்த சுப்பிரமணி (வயது 46) ஓட்டினார். கண்டக்டராக அமிர்தராஜ் (45) இருந்தார். 
அந்த பஸ் ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே மதுரையில் இருந்து வருசநாடு நோக்கி மற்றொரு அரசு பஸ் வந்தது. இதில் சுமார் 30 பயணிகள் இருந்தனர். அந்த பஸ்சை உசிலம்பட்டியை சேர்ந்த பூங்கொடி (39) ஓட்டி வந்தார். கண்டக்டராக ராஜதானியை சேர்ந்த பிரகாஷ் (39) இருந்தார். 
நேருக்குநேர் மோதல்
இந்தநிலையில் ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதியில் உள்ள தர்மசாஸ்தா கோவில் அருகில் 2 பஸ்களும் வந்தபோது, எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளானது. அப்போது பஸ்களில் இருந்த பயணிகள் அபயகுரல் எழுப்பினர். இந்த விபத்தில் 2 பஸ்களின் டிரைவர்கள், கண்டக்டர்கள், சின்னமனூரை சேர்ந்த அகிலா (33), கோட்டூரை சேர்ந்த ராஜரீகம் (45), பழனிசெட்டிபட்டியை சேர்ந்த சந்திரா (52) உள்பட 32 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் காயமின்றி தப்பினர். இந்த விபத்தில் 2 பஸ்களின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. 
இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிப்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது படுகாயம் அடைந்த அனைவரையும் மீட்டு ஆம்புலன்சுகள் மூலம் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்து காரணமாக மதுரை-தேனி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது போலீசார் துரித நடவடிக்கை எடுத்து விபத்திற்குள்ளான பஸ்களை சாலையோரமாக அப்புறப்படுத்தினர். அதைத்தொடர்ந்து போக்குவரத்து சீரானது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story