ரூ.4 லட்சத்தில் தரைப்பாலத்தை சீரமைக்கும் பணி தொடக்கம்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக ரூ.4 லட்சத்தில் தரைப்பாலத்தை சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இதனால் ஒற்றவயல் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கூடலூர்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக ரூ.4 லட்சத்தில் தரைப்பாலத்தை சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இதனால் ஒற்றவயல் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தரைப்பாலம் உடைந்தது
கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தேவர்சோலை பேரூராட்சி பகுதியில் கடந்த வாரம் திடீரென கனமழை பெய்தது. இதில் ஒற்றவயல் பகுதியில் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டு இருந்த தரைப்பாலம் உடைந்தது. இதனால் கூடலூரில் இருந்து குற்றிமுற்றி, புழம்பட்டி, பாலம்வயல், ஒற்றவயல் வழியாக மச்சிக்கொல்லி, தேவர்சோலை, தேவன்-1 பகுதிக்கு செல்லும் பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
இதன் காரணமாக பல கிராம மக்கள் அத்தியாவசிய மற்றும் அடிப்படை காரணங்களுக்காக கூடலூர் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
ரூ.4 லட்சம் செலவில்...
மேலும் உடைந்து போன தரைப்பாலத்தை உடனடியாக சீரமைத்து பஸ் போக்குவரத்து நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து ‘தினத்தந்தி’ நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
இதன் எதிரொலியாக சேதமடைந்த பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் பரிசீலனை செய்தனர். தொடர்ந்து தேவர்சோலை பேரூராட்சி மூலம் ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உடைந்த பாலத்தை புதுப்பிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
மகிழ்ச்சி
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, பஸ் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால் ஒற்றவயல் பாலம் ரூ.4 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த பணி விரைவாக முழுமை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்பின்னர் பஸ் போக்குவரத்து தொடங்கப்படும் என்றனர்.
அதிகாரிகளின் நடவடிக்கையால் கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் பாராட்டும், நன்றியும் தெரிவித்து இருக்கின்றனர்.
Related Tags :
Next Story