தேடப்படும் மாவோயிஸ்டுகள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம்


தேடப்படும் மாவோயிஸ்டுகள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம்
x
தினத்தந்தி 29 Oct 2021 8:32 PM IST (Updated: 29 Oct 2021 8:32 PM IST)
t-max-icont-min-icon

தேடப்படும் மாவோயிஸ்டுகள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்து உள்ளது.

கூடலூர்

தேடப்படும் மாவோயிஸ்டுகள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்து உள்ளது.

மாவோயிஸ்டுகள்

கேரள மாநிலம் வயநாடு, மலப்புரம், கண்ணூர், பாலக்காடு மாவட்ட வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை பிடிக்கும் பணியில் கேரள தண்டர்போல்ட் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் வயநாடு வனப்பகுதியில் பதுங்கி உள்ள மாவோயிஸ்டுகள் மாலை அல்லது இரவு நேரத்தில் எல்லையோர கிராமங்களுக்குள் புகுந்து தங்களுக்கு தேவையான பொருட்களை பொதுமக்களிடம் இருந்து பறித்து செல்லும் சம்பவங்கள் நிகழ்கிறது. 

இதனால் அவர்களை பிடிக்க கேரள, தமிழக போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். இதன் காரணமாக மாவோயிஸ்டுகள் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகி உள்ளதாக தெரிகிறது. மேலும் மாவோயிஸ்டுகளின் மறுவாழ்வுக்கான நடவடிக்கையை கேரள போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

ரூ.10 லட்சம் அறிவிப்பு

இ்ந்த நிலையில் தமிழகம், கேரளா, கர்நாடகா என 3 மாநிலங்கள் இணையும் பகுதியில் மாவோயிஸ்டுகளின் கபினி தளம் செயல்பட்டு வருகிறது. இதன் தளபதியாக இருந்த லிஜேஸ் என்பவர் கடந்த 26-ந் தேதி கேரள போலீசாரிடம் சரண் அடைந்தார். மேலும் தலைமறைவாக உள்ள பிற மாவோயிஸ்டுகளை பிடிக்கும் பணியில் தேசிய புலனாய்வு அமைப்பும் தீவிரமாக களமிறங்கி உள்ளது.

இதற்கிடையில் நிலம்பூர் வனத்தில் ஆயுத பயிற்சி செய்தது, மானந்தவாடியில் போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தது உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய மகேஷ், சுந்தரி ஆகிய 2 மாவோயிஸ்டுகள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்து உள்ளது. இது தொடர்பாக வயநாடு மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மலையாள மொழியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

தொகை உயர்வு

இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரி கூறும்போது, கடந்த பல ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள மாவோயிஸ்டுகள் மகேஷ், சுந்தரி ஆகியோர் கர்நாடகாவை சேர்ந்தவர்கள். ஜெயண்ணா, ஜான், மாரப்பா போன்ற பெயரில் மகேஷ் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். 

மேலும் கீதா, சிந்து போன்ற பெயரில் சுந்தரி வலம் வருகிறார். இவர்களை பிடிக்க தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.. இருப்பினும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதனால் தொகை ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டது என்றார்.


Next Story