பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த பெண்கள்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவையொட்டி காரைக்குடியில் ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் தேவர் சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
காரைக்குடி,
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவையொட்டி காரைக்குடியில் ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் தேவர் சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
தேவர் குருபூஜை விழா
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா இன்று(சனிக்கிழமை) ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசு விழாவாக கொண்டாப்பட உள்ளது. இதை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பல்வேறு முக்கிய பிரமுகர்கள் அங்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளனர். இதையடுத்து தேவர் குருபூஜையை முன்னிட்டு காரைக்குடி நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள முத்துராமலிங்க தேவர் சிலையை சுற்றிலும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு அந்த பகுதி முழுவதும் வண்ண விளக்கு தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது.
மேலும் காரைக்குடி நகர் முழுவதும் ஆங்காங்கே ஒலி பெருக்கி அமைக்கப்பட்டும் பல்வேறு இடங்களில் கொடி தோரணங்கள், தேவர் படம் வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது. காரைக்குடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சேதுசீமை இளைஞரணி சார்பில் சண்முகம் என்பவரது தலைமையில் அந்த பகுதியைச் சேர்ந்த 110 பெண்கள் நேற்று காலை அங்கிருந்து பால்குடம் எடுத்து கொண்டு ஊர்வலமாக பெரியார்சிலை, நூறடி சாலை வழியாக வந்து தேவர் சிலைக்கு வந்தனர். அங்கு தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
இதேபோல் காளையப்பா நகர், முத்துராமலிங்க தேவர் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமானோர் தேவர் சிலைக்கு பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து வந்து வழிபாடு செய்தனர். காரைக்குடி தொகுதி மாங்குடி எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று காலை தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல் இன்று குருபூஜை விழாவையொட்டி தேவர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு சமூக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் பசும்பொன் கிராமத்திற்கு சென்று அங்குள்ள தேவர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளனர். குருபூஜை விழாவையொட்டி காரைக்குடி பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story