பொதுமக்கள் பங்களிப்புடன் 120 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்


பொதுமக்கள் பங்களிப்புடன் 120 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்
x
தினத்தந்தி 29 Oct 2021 9:00 PM IST (Updated: 29 Oct 2021 9:00 PM IST)
t-max-icont-min-icon

தேனி பகுதியில் பொதுமக்கள் பங்களிப்புடன் புதிதாக 120 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருவதாக போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தெரிவித்தார்.

தேனி:
தேனி பகுதியில் பொதுமக்கள் பங்களிப்புடன் புதிதாக 120 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருவதாக போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தெரிவித்தார்.
கண்காணிப்பு கேமராக்கள்
தேனி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து, துரித நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் பங்களிப்புடன் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
தேனி மாவட்டத்தில் நகர்ப்புற சாலைகள், குடியிருப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக பொதுமக்கள், வணிகர்களுடன் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து பொதுமக்கள் பங்களிப்புடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டது. அதன்படி தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி பகுதிகளில் மொத்தம் 120 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
கட்டுப்பாட்டு அறைகள்
பிரதான சாலைகள், கடை வீதிகள், குடியிருப்புகள் போன்ற இடங்களில் கேமராக்கள் பொருத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஓரிரு வாரங்களில் இவை பயன்பாட்டுக்கு வந்து விடும். இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி ஆகிய போலீஸ் நிலையங்களில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு வருகிறது.
இதேபோல், அனைத்து வணிக நிறுவனங்களிலும் கட்டாயம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். ஏற்கனவே கேமராக்கள் பொருத்தி இருந்தால் அவை சரியான முறையில் இயங்குகிறதா என அவ்வப்போது சரிபார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story