மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை; தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை; தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 29 Oct 2021 9:32 PM IST (Updated: 29 Oct 2021 9:32 PM IST)
t-max-icont-min-icon

போடி அருகே மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

தேனி:
போடி அருகே மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கூலித்தொழிலாளி
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டல்களம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 59). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பவுன்தாய் (49). இவர்களுக்கு சவுந்திரபாண்டியன் என்ற மகன் உள்ளார். 
இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். அப்போது பவுன்தாய் தனது மகன் சவுந்தரபாண்டியனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார். இதற்காக பெண் பார்த்தார். இதையடுத்து அவருடைய வீட்டில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
கொலை-தற்கொலை முயற்சி
இந்த திருமண ஏற்பாடு தொடர்பாக சின்னத்துரையிடம் பவுன்தாய் தெரிவிக்கவில்லை. தன்னிடம் கலந்து ஆலோசிக்காமல் மகனுக்கு திருமண ஏற்பாடு செய்ததை அறிந்து சின்னத்துரை ஆத்திரம் அடைந்தார்.
கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ந் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு சின்னத்துரை வந்து தகராறு செய்தார். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பவுன்தாயை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.
மேலும் சின்னத்துரை மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆயுள் தண்டனை
இந்த சம்பவம் குறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சின்னத்துரை அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். இதற்கிடையே நவம்பர் 20-ந்தேதி அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ராஜராஜேஸ்வரி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி வெங்கடேசன் நேற்று தீர்ப்பு கூறினார்.
மனைவியை கொலை செய்த குற்றத்துக்கு சின்னத்துரைக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும், அதை செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றத்துக்கு ஒரு மாதம் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து சின்னத்துரையை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story