நாமக்கல் அருகே பட்டா பிரச்சினைகளுக்கான சிறப்பு முகாம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது
நாமக்கல் அருகே பட்டா பிரச்சினைகளுக்கான சிறப்பு முகாம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது
நாமக்கல்:
நாமக்கல் அருகே ஆவல்நாயக்கன்பட்டியில் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது.
சிறப்பு முகாம்கள்
தமிழக அரசின் சேவைகளை பொதுமக்களின் இருப்பிடங்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் வருவாய் கிராமங்களில் விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறப்பு முகாம்களை நடத்திட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு முகாம்களை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
இந்த நிலையில் நேற்று நாமக்கல் அருகே ஆவல்நாயக்கன்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது. கலெக்டர் சிங் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணைகளை வழங்கினார். நாமக்கல் மாவட்டத்தில் 7 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் பட்டா மாறுதல் மற்றும் திருத்தம் செய்ய வேண்டி விண்ணப்பிக்கப்பட்ட 44 மனுக்கள் மீது உடனடியாக பட்டா மாறுதல் ஆணை வழங்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.
பட்டா மாறுதல்
இதுகுறித்து கலெக்டர் ஸ்ரேயா சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-
பட்டாவில் சிறிய மாறுதலுக்கு உட்பட்ட திருத்தங்களை அந்தந்த ஊருக்கே சென்று திருத்தம் செய்து கொடுப்பதற்காக சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வருகிற டிசம்பர் மாதம் வரை ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வட்ட அளவில் கிராமங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. பட்டாதாரர் பெயர் திருத்தம், வரப்பு திருத்தம், உட்பிரிவு திருத்தம் போன்ற அனைத்து திருத்தங்களும் வருவாய்த்துறை மற்றும் நில அளவை துறைகள் மூலம் அன்றைய தினமே சரி செய்யப்பட்டு ஆணைகள் வழங்கப்படும்.
பொதுமக்கள் வருவாய்த்துறை அலுவலகங்களுக்கு அடிக்கடி செல்லும் நிலையை மாற்றுவதற்காக கிராமங்களிலேயே சென்று இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு முகாம்கள் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 2 மாதங்களுக்குள் சிறிய அளவிலான அனைத்து திருத்தங்களும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நடவடிக்கை
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா, தாசில்தார் திருமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனிடையே இந்த சிறப்பு முகாம்களில் உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் வேண்டி 99 மனுக்களையும், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, புதிய ரேஷன் அட்டை, இலவச வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 276 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story