பழனி சப்-கலெக்டர் அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட முயற்சி


பழனி சப்-கலெக்டர் அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட முயற்சி
x
தினத்தந்தி 29 Oct 2021 10:30 PM IST (Updated: 29 Oct 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

பழனியில் மண் அள்ளுவதை தடுக்க கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினர் 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

பழனி: 


திண்டுக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில், பழனி தபால் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது, பழனி சுற்றுப்புற கிராமங்களில் அனுமதியின்றி அரசு மற்றும் தனியார் இடங்களில் மண் அள்ளும் சம்பவம் நடைபெறுகிறது. இதுபற்றி போலீஸ்-வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் சப்-கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.


பின்னர் திடீரென பா.ஜ.க.வினர் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பழனி துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்தனர். மேலும் சப்-கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலக நுழைவு வாயில்களில் தடுப்புகள் வைக்கப்பட்டது. இதனால் பா.ஜ.க.வினர் தாராபுரம் சாலையில் நின்று மறியல் செய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே பொள்ளாச்சி, தாராபுரம் செல்லும் வாகனங்கள் மார்க்கெட் வழியே திருப்பி விடப்பட்டன.


அதையடுத்து பா.ஜ.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது, கோரிக்கை தொடர்பாக சப்-கலெக்டரிடம் மனு அளிக்கலாம் என்று தெரிவித்தனர். அதன்பிறகு பா.ஜ.க. சார்பில் சப்-கலெக்டர் ஆனந்தியிடம் மனு அளிக்கப்பட்டது. எனினும் அனுமதியின்றி சாலை மறியல் செய்ததாக மாவட்ட தலைவர் கனகராஜ் உள்பட பா.ஜ.க.வினர் 70 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Next Story