பெண்ணின் இறுதி சடங்கில் சாம்பிராணி புகையால் பரபரப்பு


பெண்ணின் இறுதி சடங்கில் சாம்பிராணி புகையால் பரபரப்பு
x
தினத்தந்தி 29 Oct 2021 10:39 PM IST (Updated: 29 Oct 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

பெண்ணின் இறுதி சடங்கில் சாம்பிராணி புகையால் பரபரப்பு

தேன்கனிக்கோட்டை, அக்.30-
பெண்ணின் இறுதி சடங்கில் சாம்பிராணி புகையால் தேன்கூட்டில் இருந்து கலைந்து சென்ற தேனீக்கள் கொட்டி 20 பேர் காயம் அடைந்தனர்.
பெண்ணின் இறுதிசடங்கு
தேன்கனிக்கோட்டை அருகே நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
தேன்கனிக்கோட்டையை அடுத்த கோட்டை உளிமங்கலத்தை சேர்ந்தவர் ராமண்ணா. இவருடைய மனைவி வெங்கடம்மா (வயது 70). இவர் நேற்று காலை உயிரிழந்தார். இவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். உடலை உறவினர்கள் தூக்கிக்கொண்டு மயானத்துக்கு வந்தனர். மூதாட்டி உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாக இறுதி சடங்குகள் நடந்தன. அப்போது சாம்பிராணி புகை போட்டுள்ளனர். புகை அந்த பகுதி முழுவதும் பரவியது. அங்கிருந்த மரத்தில் தேன்கூடு இருந்தது. சாம்பிராணி புகையால் தேன் கூட்டில் இருந்து தேனீக்கள் கலைந்தன. அந்த தேனீக்கள் ஒவ்வொன்றாக அந்த பகுதி முழுவதும் ஆங்காங்கே பறக்க தொடங்கியது.
20 பேர் காயம்
அப்போது மயானத்தில் இறுதி சடங்கிற்கு வந்திருந்தவர்களை தேனீக்கள் கொட்டியது. அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்படி தேனீக்கள் கொட்டியதில் மோகன்ராஜ் (50), குமார் (46), நாராயணப்பா (60), ராதேஷ் (32), மரியப்பா (55), கவுரம்மா (65), திம்மக்கா (65) உள்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் வலியால் அலறி துடித்தனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
பின்னர் காயம் அடைந்தவர்களை, மற்றவர்கள் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் மரியப்பா, கவுரம்மா ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மற்றவர்களுக்கு ெதாடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story