தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’க்கு பாராட்டு
சேலம் நகரம் மெய்யனூர் ராம்நகர் பழைய தபால் அலுவலகம் தெருவில் கடந்த 2 ஆண்டுகளாக தார்சாலை திட்டத்தில் சாலை பணி தொடங்கப்பட்டு பாதியில் நின்றது. இந்த சாலை சேறும், சகதியுமாக காட்சி அளித்தது. எனவே இந்த சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 3-ந் தேதி ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. உடனே அதிகாரிகள் நடவடிக்கையால் தார்சாலை சீரமைக்கப்பட்டது. இதற்கு உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கு அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
ஆ.தமிழழகன், மெய்யனூர், சேலம்.
குப்பைகள் அள்ளப்படுமா?
கிருஷ்ணகிரி மாவட்டம் தொட்ட பூவத்தி கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு திறந்தவெளியில் வீடுகளுக்கு அருகிலேயே குப்பைகளை கொட்டுவதால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. இந்த வழியாக பள்ளி மாணவ- மாணவிகள் செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன், அந்த பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு குப்பை தொட்டி வைக்க வேண்டும்.
-ஊர் பொதுமக்கள், சிக்க பூவத்தி, கிருஷ்ணகிரி.
சேலம் சாரதா கல்லூரி சாலையில் இருந்து தோப்புக்காடு சாலை பிரியும் இடத்தில் உள்ள குப்பை தொட்டியில் குப்பைகள் நிரம்பி வழிகிறது. இந்த குப்பைகள் சாலையில் தேங்கி சுகாதார கேடாக காட்சி அளிக்கிறது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக உள்ளது. எனவே சாலையில் குப்பைகளை கொட்டாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜயராஜசோழன், அத்வைத ஆசிரமம் ரோடு, சேலம்.
சேலம் அம்மாபேட்டை குமரமுத்துசாமி செட்டி தெருவில் குப்பைகள் குவிந்து உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் குழந்தைகளுக்கு நோய் வந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது. எனவே இந்த இடத்தை சுத்தம் செய்ய அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மோகன்ராஜ், அம்மாபேட்டை, சேலம்.
குண்டும், குழியுமான சாலை
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் நெடுஞ்சாலை கிராமம் முதல் கத்திரிப்பள்ளி கிராமம் வரை 3 கி.மீ. தொலைவு உள்ளது. இந்த சாலை வேப்பனப்பள்ளி வழியாக பல கிராமங்களின் வழியாக குருபரப்பள்ளி சென்று தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல இணைப்பு சாலையாக உள்ளது. தற்போது இந்த சாலையில் தார் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடந்துசெல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். இந்த சாலையை சீரமைத்து புதிய தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், கிருஷ்ணகிரி.
கிருஷ்ணகிரியில் பெங்களூர் சாலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. தினமும் இந்த விளையாட்டு மைதானத்தில் பலரும் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்கள். தற்போது கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதியில் பெய்து வரும் மழையால் மைதானத்திற்கு செல்லும் சாலை சேறும் சகதியுமாக மாறி விட்டது. இதனால் பொதுமக்கள் பலரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். எனவே இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வினோத், கிருஷ்ணகிரி.
சாலையில் விபத்து அபாயம்
தர்மபுரி நகரில் சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்புகளின் இடையே ஆங்காங்கே இடைவெளி உள்ளது. இந்த இடைவெளியின் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.. இதை தவிர்க்க சாலையில் உள்ள தடுப்புகளில் இடைவெளி இல்லாமல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சின்னசாமி, பிடமனேரி, தர்மபுரி.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
தர்மபுரி புறநகர் மற்றும் டவுன் பஸ் நிலையத்திற்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த இரண்டு பஸ் நிலையங்களிலும் உள்ள நடைபாதைகளில் நூற்றுக்கணக்கான ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன. இதன் காரணமாக பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. குறிப்பாக புறநகர் பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களால் தினமும் சச்சரவுகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் பஸ்கள் வந்து செல்வதிலும் நெருக்கடி ஏற்படுகிறது. இதனை தடுக்க நகராட்சி நிர்வாகம் பஸ் நிலையங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
-வினோத்குமார், தர்மபுரி.
Related Tags :
Next Story