வணிகவரித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை பட்டாசு ரூ.25 ஆயிரம் பறிமுதல்
திருவண்ணாமலையில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் திடீர் சோதனை நடத்தியதில் 40 பட்டாசு கிப்ட் பாக்ஸ்கள், ரூ.25 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் திடீர் சோதனை நடத்தியதில் 40 பட்டாசு கிப்ட் பாக்ஸ்கள், ரூ.25 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு யாரேனும் லஞ்சமாக பணமோ, அன்பளிப்பு பொருட்களோ கொடுக்கப்படுகிறதா என்று தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஒருங்கிணைந்த வணிகவரித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக வளாகத்தில் துணை ஆணையர் (வணிக வரி), உதவி ஆணையர் (மாநில வரி) திருவண்ணாமலை 1 மற்றும் 2 ஆகிய அலுவலகங்கள் உள்ளன.
இங்கு பணியாற்றும் அலுவலர்களுக்கு
தீபாவளியையொட்டி கிப்ட் பொருட்கள் மற்றும் பணம் கொடுக்கப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்து உள்ளது.
40 பட்டாசு பாக்ஸ்
இதையடுத்து நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத் துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் தலைமையில் 7 பேர் அடங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது துணை ஆணையர் அறையில் இருந்து பட்டாசு கிப்ட் பாக்ஸ், கிப்ட் பொருட்கள் சால்வைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் முதல் தளம் மற்றும் இரண்டாம் தளத்தில் செயல்பட்டுவரும் உதவி ஆணையர் அலுவலகங்களில் இருந்தும் கிப்ட் பொருட்கள், பட்டாசு கிப்ட் பாக்ஸ் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் சோதனையில் கணக்கில் வராத சுமார் ரூ.25 ஆயிரம் கைப்பற்றப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அங்கு பணியாற்றும் பணியாளர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இந்த சோதனை இரவு சுமார் 10 மணிக்கு மேல் வரை நீடித்தது.
முதற்கட்ட தகவலில் 40 பட்டாசு கிப்ட் பாக்ஸ்கள், 4 கைக்கெடிகாரங்கள், சால்வைகள் மற்றும் ரூ.25 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story