சங்கராபுரம் பட்டாசுக்கடை தீ விபத்தில் படுகாயம் அடைந்த சிறுவன் சாவு
சங்கராபுரம் பட்டாசுக்கடை தீ விபத்தில் படுகாயம் அடைந்த சிறுவன் சாவு பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு
சங்கராபுரம்
சங்கராபுரத்தில் கடந்த 26-ந் தேதி அன்று மாலை பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் பலியானார்கள். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து பல்வேறு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் விபத்தில் படுகாயமடைந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வந்த வாணாபுரம் கிராமத்தை சேர்ந்த பாலு மகன் சஞ்சய்(வயது 16) சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.
சஞ்சய்யின் தந்தை பாலு கடந்த 4 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். தாயார் கன்னியம்மாள்(35) சங்கராபுரம் செல்வகணபதி மளிகை கடையில் வேலை செய்து வருகின்றார். தீபாவளி பண்டிகைக்கு சட்டை வாங்கித் தருவதற்காக சஞ்சையை சங்கராபுரத்துக்கு அழைத்து வந்த அவர் மகனை மளிகை கடையில் உட்கார வைத்துவிட்டு மாவு அரைத்து வருவதற்காக அங்கிருந்து சென்று விட்டார்.
அவர் சென்ற பிறகு பட்டாசு கடையில் நடந்த தீ விபத்தி்ல் சஞ்சய்யும் படுகாயம் அடைந்தார். இதை அறிந்து சம்பவ இடத்துக்கு ஓடி வந்த கன்னியம்மாள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி சஞ்சையை கண்டு கதறி அழுதார். பின்னர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சஞ்சய் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தில் கடை நடத்தி வந்த செல்வகணபதியின் பட்டாசு கடை உரிமத்தை ரத்து செய்து மாவட்ட வருவாய் அதிகாரி விஜய்பாபு உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சங்கராபுரம் வருவாய் ஆய்வாளர் திருமலை, கிராம நிர்வாக வரதராஜன் ஆகியோர் செல்வகணபதி வீட்டின் முன்பு ஒட்டினர்.
Related Tags :
Next Story