திருப்பூரில் தீபாவளி ஆடை விற்பனை தித்திக்க வில்லை
வெளிமாநில வியாபாரிகள் வருகை இல்லாததால் திருப்பூரில் தீபாவளி ஆடை விற்பனை தித்திக்க வில்லை. தீபாவளியையொட்டி பரபரப்பாக காணப்படும் காதர்பேட்டை வெறிச்சோடி கிடக்கிறது.
திருப்பூர்
வெளிமாநில வியாபாரிகள் வருகை இல்லாததால் திருப்பூரில் தீபாவளி ஆடை விற்பனை தித்திக்க வில்லை. தீபாவளியையொட்டி பரபரப்பாக காணப்படும் காதர்பேட்டை வெறிச்சோடி கிடக்கிறது.
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை என்றாலே நினைவுக்கு வருவது பட்டாசுகள். இதற்கு அடுத்தபடியாக முக்கிய பங்கு வகிப்பது ஆடைகள். அனைவரும் தீபாவளி பண்டிகை அன்று தங்களுக்கு பிடித்தமான ஆடைகளை அணிந்து பட்டாசுகள் வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்வார்கள்.
இதனால் தீபாவளி பண்டிகைக்கு சில வாரங்களுக்கு முன்பிருந்தே ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதும். தீபாவளி பண்டிகை காலத்தை கருத்தில்கொண்டு ஜவுளிக்கடைகளும் சிறப்பு தள்ளுபடிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவார்கள். இந்த தள்ளுபடியிலும் போட்டா-போட்டி நடைபெறுவது வழக்கமான ஒன்று.
காதர்பேட்டை
ஆடை தயாரிப்புக்கு பெயர் பெற்ற திருப்பூரில் திரும்பும் திசையெங்கும் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள், ஆடை விற்பனை கடைகளாக காட்சியளிக்கும். இருப்பினும் ஆடை விற்பனை என்றால் அனைவருக்கும் நினைவிற்கு வருவது காதர்பேட்டையாகும். திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள காதர்பேட்டையில் 1000-க்கும் மேற்பட்ட சில்லரை மற்றும் மொத்த ஆடை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த கடைகளுக்கு வெளிமாநில வியாபாரிகள் ஏராளமானோர் வந்து தங்களுக்கு தேவையான ஆடைகளை வாங்கி செல்வார்கள். பலர் ஆர்டர்கள் கொடுத்து விட்டு செல்வார்கள். இதனால் காதர்பேட்டை எப்போதும் பரபரப்பாக இருக்கும். குறிப்பாக பண்டிகை காலங்களில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் அலைமோதும்.
தித்திக்காத...
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நெருங்கிய நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் திருப்பூர் காதர்பேட்டைக்கு அதிக அளவு வருகை தரவில்லை. இதனால் ஆடை விற்பனை சரிவை சந்தித்துள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக ஏற்கனவே கடந்த ஆண்டும் ஆடை விற்பனை பாதிக்கப்பட்டது.
தற்போது இந்த ஆண்டும் ஆடை விற்பனை தித்திக்கவில்லை. இதனால் ஆடை தயாரிப்பாளர்கள் பலரும் வேதனை அடைந்துள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆடைகள் விற்பனையாகாமல் கடைகளில் தேக்கமடைந்துள்ளன. கடும் நஷ்டத்தை காதர்பேட்டை வியாபாரிகள் சந்தித்து வந்து கொண்டிருக்கிறார்கள்.
60 சதவீதம் சரிவு
இது குறித்து ஆடை தயாரிப்பாளர்கள் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையையொட்டி காதர்பேட்டைக்கு வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவு வியாபாரிகள் வந்து பல லட்சங்களுக்கு ஆடைகளை வாங்கி செல்வார்கள். இதனால் தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே ஆடைகள் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கும். வியாபாரிகளும் பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே அதிக அளவில் வர தொடங்கிவிடுவார்கள்.
ஆனால் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் ஆடை விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது. கொரோனா பாதிப்பு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருகிறவர்களுக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 60 சதவீதம் ஆடை விற்பனை இந்த ஆண்டு சரிவை சந்தித்துள்ளது. கொரோனா 1-வது மற்றும் 2-வது அலையில் பல தொழில்கள் பாதிக்கப்பட்டன.
வாடகை கொடுக்க சிரமம்
குறிப்பாக, திருப்பூரில் ஆடை தயாரிப்பாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். காதர்பேட்டையில் உள்ள கடைகளுக்கு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை மாதந்தோறும் வாடகை கொடுத்து வருகிறார்கள். தற்போதைய சூழலில் வாடகை கொடுக்கவே பலரும் சிரமத்தை சந்தித்து வரும் நிலை உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story