தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 29 Oct 2021 11:36 PM IST (Updated: 29 Oct 2021 11:36 PM IST)
t-max-icont-min-icon

நாகை, திருவாரூர், மயிலாடுதுறை பகுதிகளில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை சீரமைக்கப்படுமா? 
மயிலாடுதுறை மாவட்டம் திருவழுந்தூர் காமராஜர் காலனி செல்லும் சாலை குண்டும், குழியும் காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கிவிடுகின்றன. இதன் காரணமாக இரவு நேரங்களில் சாலையில் மழைநீர் தேங்கிகிடப்பது தெரியாமல் வேகமாக வரும் வாகனங்கள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றன. எனவே, உயிர்பலி எதுவும் ஏற்படும் முன்பு குண்டும், குழியுமாக உள்ள சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-சாமிவேல், மயிலாடுதுறை.
மரக்கிளைகள் அகற்றப்படுமா? 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தேரடியில் மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளின் வழித்தடத்தில் இடையூறாக இருந்த மரக்கிளைகள் மின் ஊழியர்களால் அகற்றப்பட்டன. இவ்வாறு அகற்றப்பட்ட மரக்கிளைகள் அப்புறப்படுத்தபடாமல் அப்படியே குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குவித்து வைக்கப்பட்டுள்ள மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், திருவாரூர்.
பஸ்சுக்குள் குடைபிடித்தபடி பயணம்
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் பகுதிக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூருக்கு இயக்கப்படும் ஒரு சில அரசு பஸ்கள் பராமரிப்பின்றி காணப்படுகின்றன. குறிப்பாக பஸ்சின் மேற்கூரைகள் சேதமடைந்து மழை காலங்களில் மழைநீர் பஸ்சுக்குள் மழைநீர் கொட்டுகிறது. இதனால் பயணிகள் பஸ்சுக்குள் குடைபிடித்தபடி பயணம் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ள பஸ்களை சீரமைத்து தரவேண்டும் என்பதே பொதுமக்களின்கோரிக்கையாகும்.
-சங்கர், வடகரை.
சேறும், சகதியுமான சாலை
திருவாரூர் மாவட்டம் முசிரியம் ஊராட்சி பகுதியில் திட்டாணிமுட்டம் நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையத்துக்கு செல்லும் சாலை பராமரிப்பின்றி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் விவசாயிகள் டிராக்டர் மற்றும் கனரக வாகனங்களில் நெல் மூட்டைகளை சாலை வழியாக கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், நெல் மூட்டைகளை கொண்டு வரும் வாகனங்கள் சேற்றில் சிக்கிக்கொள்கின்றனர். இதனால் விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-மதியழகன், திருவாரூர்.

Next Story