பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்ல தகுதியில்லாத வாகனங்கள் ரத்து செய்யப்படும்


பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்ல தகுதியில்லாத வாகனங்கள் ரத்து செய்யப்படும்
x
தினத்தந்தி 30 Oct 2021 12:09 AM IST (Updated: 30 Oct 2021 12:09 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்ல தகுதியில்லாத வாகனங்கள் ரத்து செய்யப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

கரூர்
பள்ளி பஸ்கள் ஆய்வு
தமிழக அரசின் உத்தரவின்படி வருகிற 1-ந்தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி கரூரில் பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்துச்செல்ல பயன்படுத்தப்படும் பஸ்கள் உள்ளிட்ட பிற வாகனங்கள் தரமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளதா என்பது குறித்து மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:- 
பள்ளி மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் வாகனங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தாத நிலையில் இருந்துள்ளதால், தனியார் பள்ளிகளின் வாகனங்கள் இன்று (அதாவது நேற்று) ஆய்வு செய்யப்பட்டது. 2012-ம் ஆண்டு வரையறுக்கப்பட்ட தமிழ்நாடு மோட்டர் வாகன சட்டப்படி வாகனங்கள் சாலையில் செல்ல தகுதியாக உள்ளதா சுத்தமாகவும், சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளதா என்பதையும், நோய் தொற்றுகள் எவ்விதத்திலும் பரவாமல் உள்ளதா எனவும் பார்வையிடப்பட்டுள்ளது.
கண்காணிப்பு கேமரா
இன்று (நேற்று) 92 பள்ளிகளின் 463 வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா தொற்றிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு சுகாதாரமாக உள்ளதா என்பதையும், வேக கட்டுப்பாட்டு கருவி, அவசரகால வழி, தீயணைக்கும் கருவி, முதலுதவி பெட்டி போன்றவைகள் சரியாக உள்ளதா என்பதையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
பஸ்களில்கண்காணிப்பு கேமராக்கள் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இன்றைய ஆய்வின்போது சரியாக இல்லாத பஸ்களை உடனடியாக விதிகளின்படி சரிசெய்வதற்கும், பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்ல தகுதியில்லாததாக கருதப்படும் வாகனங்களை ரத்து செய்யவும் வட்டார போக்குவரத்துத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
இவ்வாறு தெரிவித்தார். 
தீ தடுப்பு ஒத்திகை
முன்னதாக தமிழக அரசின் உத்தரவின்படி நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் குழந்தைகளை அழைத்து செல்லும் டிரைவர்களுக்கு விபத்து காலங்களில் முதலுதவி அளிப்பது குறித்தும், தீ தடுப்பு ஒத்திகைகளும் சம்பந்தப்பட்ட துறை வல்லுனர்களால் விளக்கப்பட்டது. 
இந்த ஆய்வின்போது கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த், துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story