திருச்சியில் டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டி பணம் பறிப்பு


திருச்சியில் டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டி பணம் பறிப்பு
x
தினத்தந்தி 30 Oct 2021 1:43 AM IST (Updated: 30 Oct 2021 1:43 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் ரூ.100-க்கு பீர் கேட்டு தகராறில் ஈடுபட்டு டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டி பணம் பறித்த 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருச்சி, அக்.30-
திருச்சியில் ரூ.100-க்கு பீர் கேட்டு தகராறில் ஈடுபட்டு டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டி பணம் பறித்த 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
பீர் கேட்டு தகராறு
திருச்சி திருவானைக் காவல் டிரங்க் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் அய்யம்பாளையத்தை சேர்ந்த நாராயணன் (வயது 40) உள்பட 3 பேர் பணி செய்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் மோட்டார் சைக்கிளில் 2 பேர் மதுபாட்டில் வாங்க அந்த கடைக்கு வந்தனர். அவர்களில் ஒருவர், 100 ரூபாய் கொடுத்து பீர் கேட்டுள்ளார். பீர் விலை ரூ.130-க்கு மேல் என்பதால் அதற்கு நாராயணன் தர மறுத்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ஊழியருக்கு அரிவாள் வெட்டு
இதனால் ஆத்திரமடைந்த வாலிபர், மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வந்து கடை முன் இருந்த இரும்பு வலையின் ஓட்டை பகுதியில் உள்ளே விட்டு ஆட்டி ரகளை செய்ததுடன், முன்னால் இருந்த பிரிட்ஜை வெட்டினார்.
இதைத்தடுக்க முயன்ற விற்பனையாளர் நாராயணனின் கையையும் அவர் வெட்டினார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும், கையை உள்ளே விட்டு கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு, இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பினர். செல்லும் போது வழியில் பானிப்பூரி விற்பவரிடமும் பணத்தை பறித்து சென்றுள்ளனர்.
2 பேருக்கு வலைவீச்சு
இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், டாஸ்மாக் கடை விற்பனையாளரை அரிவாளால் வெட்டி பணம் பறித்து சென்றவர்கள் கீழக்கொண்டயம்பேட்டையை சேர்ந்த ரகுபதி, பாரதி தெருவை சேர்ந்த ஜீவா என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story