யூரியா உரத்திற்கு கடும் தட்டுப்பாடு


யூரியா உரத்திற்கு கடும் தட்டுப்பாடு
x
தினத்தந்தி 29 Oct 2021 8:55 PM GMT (Updated: 29 Oct 2021 8:55 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் யூரியா உரத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

தாமரைக்குளம்:

உரக்கடைகள் மீது நடவடிக்கை
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை தெரிவித்து பேசினர். இதில் காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் தர்மராஜன் பேசுகையில், தற்போது நிலவி வரும் யூரியா தட்டுப்பாட்டால் தனியார் உரக்கடைகளில் யூரியா கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. அந்த உரக்கடைகளை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை பாசன வாய்க்கால்கள் அனைத்தையும் அளவீடு செய்து, கரைகளில் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும், என்றார்.
அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் செங்கமுத்து பேசுகையில், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும்போது முழுமையாக இழப்பீட்டு தொகையை பெற்றுத்தர வேண்டும். பழமையான மின் கம்பிகளை மாற்ற வேண்டும். புதிய மின்மாற்றி அமைக்கும்போது விவசாயிகளிடம் பணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். மாவட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் உளுந்தை வாங்க வேண்டும். புதிய விவசாயிகளுக்கு 75 சதவீதத்தில் பயிர்க்கடன் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
கூடுதல் விலை
மேலும் விவசாயிகள் பேசுகையில், மாவட்டத்தில் தற்போது யூரியா உரத்திற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்களில் போதிய அளவில் உரம் கிடைப்பதில்லை. தனியார் உரக்கடைகளில் கூடுதல் விலை கொடுத்து யூரியா வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. வேளாண்மை துறை அதிகாரிகளிடம் கேட்டால் குறைந்த அளவு பயன்படுத்துங்கள் என்று கூறுகிறார்கள். பயிர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலையில், எவ்வாறு குறைந்த அளவு பயன்படுத்துவது, என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும், அரியலூர் மாவட்ட வனத் தோட்ட கழகத்தில் விவசாயிகள் முந்திரி கன்றுகள் வாங்கச் சென்றால் விருத்தாச்சலம் வனத் தோட்ட கழகத்திற்கு செல்லுமாறு கூறுகின்றனர். ஆனால் அங்கு சில நேரங்களில் முந்திரி கன்றுகள் கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகளுக்கு பணம் மற்றும் கால விரயம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க அரியலூர் அல்லது ஜெயங்கொண்டத்தில் வனக்கோட்ட கழகம் மூலம் முந்திரி கன்றுகள் உள்ளிட்டவை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.

Next Story