பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இடி, மின்னலுடன் மழை பெய்ததால் நேற்று முன்தினம் நள்ளிரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சுமார் 4 மணி நேர இடைவெளியில் மின் வினியோகம் சீர் செய்யப்பட்டது. மேலும் நேற்று காலை தொடங்கி இரவு வரை விட்டுவிட்டு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாலையோர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சம்பா பருவ நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நடவு செய்ய தொழிலாளர்கள் கிடைக்காமல் விவசாயிகள் சிரமப்பட்டனர். மக்காச்சோளம் அறுவடை மற்றும் உலர வைக்கும் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பொன்னாறு பிரதான பாசன வாய்க்கால் மழை நீரால் நிரம்பி கரைகளை தொட்டுக்கொண்டு தண்ணீர் செல்கிறது. பொன்னாறு மற்றும் சிந்தாமணி ஓடை தண்ணீர் ஒன்றாக கலக்கும் குறிச்சி கலிங்கு உபரிநீர் போக்கி வழியாக கொள்ளிடம் ஆற்றுக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. பல்வேறு இடங்களில் வயல்களில் இருந்து தண்ணீர் வடிவதற்கான வடிகால்கள் சரிவர சீரமைக்கப்படாததால் ஒரு நாள் பெய்த மழைக்கே வயல்களில் இருந்து தண்ணீர் வடிவது கேள்விக்குறியாகியுள்ளது.
Related Tags :
Next Story