தஞ்சையில் கனமழை
தஞ்சை மாவட்டத்தில் கனமழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும் வயல்களில் தேங்கிய தண்ணீரை வடிய வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்டத்தில் கனமழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும் வயல்களில் தேங்கிய தண்ணீரை வடிய வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. மேலும் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தஞ்சை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
தஞ்சை மாவட்டத்தில் நேற்றுஅதிகாலையில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இடைவிடாமல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் அனைத்திற்கும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுமுறை அறிவித்தார்.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஆனால் கல்லூரிகள் அனைத்தும் வழக்கம்போல் செயல்பட்டன. மாணவ, மாணவிகள் குடைபிடித்தபடி கல்லூரிக்கு வந்து சென்றனர். மழை தொடர்ந்து பெய்ததால் பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காலை 9.45 மணிக்கு மழை நின்றுவிட்டது. பின்னர் சிறிதுநேரத்தில் வெயில் அடிக்க தொடங்கியது. அதன்பிறகு இயல்பு வாழ்க்கை திரும்பியது.
பிற்பகலில் அவ்வப்போது மழை பெய்வதும், நிற்பதுமாக இருந்தது. ஏற்கனவே மழையின் காரணமாக சாய்ந்த குறுவை நெற்பயிர்களை காக்க விவசாயிகள் வயலில் தேங்கிய தண்ணீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தநிலையில் மீண்டும் மழை பெய்ததால் கவலை அடைந்தனர். மழையினால் தஞ்சை மாநகரில் சாலையோர கடை வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்த மழையினால் வீதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மழை தண்ணீருடன் கழிவுநீரும் பெருக்கெடுத்து ஓடியது. தஞ்சை பழைய நீதிமன்றம் அருகே தண்ணீர் வடிய வழியில்லாத காரணத்தினால் சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். பின்னர் தற்காலிகமாக குழியை வெட்டி பாதை அமைக்கப்பட்டதை தொடர்ந்து தண்ணீர் வடிந்தது.
Related Tags :
Next Story