போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகள்
சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
சேதுபாவாசத்திரம்;
சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
கிழக்கு கடற்கரை சாலை
தஞ்சை மாவட்டத்தில் தம்பிக்கோட்டை முதல் கட்டுமாவடி தொடக்கம் வரை சுமார் 40 கிலோ மீட்டர் கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான 2 சக்கர மற்றும் 4 வாகனங்கள் சென்று வருகின்றன. கன்னியாகுமரி முதல் சென்னை வரை செல்லும் முக்கிய சாலையான இந்த கிழக்கு கடற்கரை சாலையில், தம்பிக்கோட்டை முதல் கட்டுமாவடி வரை 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் என முக்கியமான ஊர்களும் உள்ளன.
போக்குவரத்துக்கு இடையூறு
ராமேசுவரம், ராமநாதபுரம், நாகூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் கார்களில் வந்து செல்கிறார்கள். சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு உரம், மீன், கருவாடு உள்ளிட்ட பொருட்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களும் இந்த வழியாக சென்று வருகின்றன. கிழக்கு கடற்கரை சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றி திரிகின்றன. இதனால் இந்த பகுதியில் தினமும் ஏராளமான வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.
அபராதம்
எனவே சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மரக்காவலசை நா.சாகுல்ஹமீது கூறியதாவது:- கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக இரவில் மாடுகளால் அதிக அளவு தொல்லை ஏற்படுகிறது. இது குறித்து ஒன்றியக்குழு கூட்டத்திலும் பேசி உள்ளேன். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது போல சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை, பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் அவசர விபத்து சிகிச்சை மையம் திறக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story