எடப்பாடியில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை
எடப்பாடியில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
எடப்பாடி:
எடப்பாடியில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பிளஸ்-2 மாணவி
எடப்பாடி பகுதியை சேர்ந்த டிரைவர் ஒருவருடைய 17 வயது மகள் அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் பள்ளிக்கூடத்துக்கு சென்று வரும்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும், அந்த மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்கு இடையே காதலாக மாறியது. இதனால் 2 பேரும் ஒருவரை, ஒருவர் காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் 2 பேரின் பெற்றோருக்கும் தெரியவந்தது. இதற்கு 2 பேரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவர்களை கண்டித்தனர். மேலும் ஒழுங்காக படிக்குமாறு அறிவுரை கூறியுள்ளனர்.
தற்கொலை
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாணவி, அந்த சிறுவனின் வீட்டுக்கு சென்று விட்டதாக தெரிகிறது. இதனை அறிந்த மாணவியின் பெற்றோர், அந்த சிறுவனின் வீட்டுக்கு சென்று, அவரை அழைத்து வந்துள்ளனர். மேலும் தற்போது நன்றாக படிக்க வேண்டும் என்றும், பின்னர் திருமணம் செய்து வைக்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.
ஆனாலும் மாணவி மனவேதனையில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் ஒரு அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதனர்.
விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த எடப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆனந்தன் மற்றும் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story