பொள்ளாச்சி பாலியல் வழக்கு கைதிகளுடன் குடும்பத்தினர் பேச அனுமதி:சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேரிடம் போலீஸ் கமிஷனர் விசாரணை
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதிகளுடன் குடும்பத்தினர் பேச அனுமதி அளித்ததையொட்டி பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேரிடம் போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடா நேரில் விசாரணை நடத்தினார்.
சேலம்:
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதிகளுடன் குடும்பத்தினர் பேச அனுமதி அளித்ததையொட்டி பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேரிடம் போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடா நேரில் விசாரணை நடத்தினார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட வசந்தகுமார், திருநாவுக்கரசு, மணிவண்ணன், சதீஷ், சபரிராஜன் ஆகிய 5 பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த 20-ந் தேதி 5 பேரையும் சேலம் மத்திய சிறையில் இருந்து ஆயுதப்படை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், போலீஸ்காரர்கள் பிரபு, வேல்குமார், ராஜ்குமார், நடராஜன், ராஜேஷ்குமார், கார்த்தி ஆகிய 7 பேர் தனி வாகனத்தில் கோவை கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர்.
விசாரணை முடிந்து அவர்களை மீண்டும் சேலத்திற்கு அழைத்து வந்தனர். வழியில் கோவை விமான சாலை அருகில் 5 கைதிகளையும், அவர்களது குடும்பத்தினர் சந்தித்து பேச அனுமதித்துள்ளனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
பணி இடைநீக்கம்
இதையடுத்து பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுடன் உறவினர்களை பேச அனுமதி வழங்கியதற்காக வேனில் பாதுகாப்பு பணிக்கு சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் உள்பட 7 பேரையும் பணி இடைநீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடா உத்தரவிட்டார். மேலும் 7 பேரிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படியும் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ், கூடுதல் கமிஷனர் கும்மராஜா, நுண்ணரிவு பிரிவு உதவி கமிஷனர் பூபதிராஜா ஆகியோர் 7 பேரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் விசாரணை அறிக்கையை போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடாவிடம் தாக்கல் செய்தனர்.
கமிஷனர் நேரில் விசாரணை
இதைத்தொடர்ந்து போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடா, பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், போலீஸ்காரர்கள் பிரபு, வேல்குமார், ராஜ்குமார், நடராஜன், ராஜேஷ்குமார், கார்த்தி ஆகிய 7 பேரையும் தனித்தனியாக அழைத்து நேரில் விசாரணை நடத்தினார்.
Related Tags :
Next Story