சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் உலக பக்கவாத தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி - ‘டீன்’கள் தலைமையில் நடந்தது


சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் உலக பக்கவாத தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி - ‘டீன்’கள் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 30 Oct 2021 5:54 AM IST (Updated: 30 Oct 2021 5:54 AM IST)
t-max-icont-min-icon

சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் உலக பக்கவாத தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், அந்தந்த ஆஸ்பத்திரி டீன்கள் தலைமையில் நடந்தது.

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 29-ந்தேதி உலக பக்கவாத தடுப்பு விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படும். அதன்படி நேற்று சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பக்கவாத தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ‘டீன்’ டாக்டர் சாந்திமலர் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், பொதுமக்களிடையே பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது. அப்போது வண்ண பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டது. பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

இதையடுத்து பக்கவாதம் குறித்த பொதுமக்களின் சந்தேகங்களுக்கு, டாக்டர்கள் விளக்கம் அளிக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மருத்துவ மாணவர்களின் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் இயக்குனர் டாக்டர் மணி தலைமையில் பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. அப்போது டாக்டர் மணி கூறியதாவது:-

பக்கவாதம் என்பது மூளையின் ரத்தக்குழாய்களில் திடீரென்று அடைப்பு ஏற்படுவதால், மூளைக்கு ரத்தம் செல்வது தடைபடுவது அல்லது ரத்த குழாய் வெடிப்பினால் மூளைக்குள் ரத்தக்கசிவு ஏற்பட்டு ஒரு பகுதியிலோ அல்லது முழுமையாகவோ ஏற்படும் மூளை செயலிழப்பாகும். உலகளவில் உயிரிழப்புகளில், மாரடைப்புக்கு 2-வது காரணியாக பக்கவாதம் உள்ளது. 55 வயதுக்கு மேல் 5 பெண்களில் ஒருவருக்கும், 6 ஆண்களில் ஒருவருக்கும் வாழ்நாள் ஆபத்தாக இருக்கிறது. இந்தியாவில் ஒரு லட்சம் பேரில், 105 முதல் 152 பேருக்கு பக்கவாதம் ஏற்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டீன் டாக்டர் தேரணிராஜன் தலைமையில் உலக பக்கவாத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Next Story