தமிழகத்தில் 7-ம் கட்டமாக 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்


தமிழகத்தில் 7-ம் கட்டமாக 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 30 Oct 2021 8:38 AM IST (Updated: 30 Oct 2021 8:39 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 7-ம் கட்டமாக இன்று 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது.

சென்னை,

தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து தொடர்ந்து விமானங்கள் மூலம் அனுப்பி வருகிறது. கொரோனா 3-வது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாமை வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 12-ந்தேதி 40 ஆயிரம் இடங்களில் 28.91 லட்சம் பேருக்கும், 19-ந்தேதி 20 ஆயிரம் இடங்களில் 16.43 லட்சம் பேருக்கும், 26-ந்தேதி 23 ஆயிரம் இடங்களில் 25.04 லட்சம் பேருக்கும், கடந்த 3-ந்தேதி 20 ஆயிரம் இடங்களில் 17.04 லட்சம் பேருக்கும், கடந்த 10-ந்தேதி 32 ஆயிரம் இடங்களில் 22.85 லட்சம் பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

மதுபிரியர்களுக்காகவும், இறைச்சி சாப்பிடுபவர்களுக்காகவும் ஞாயிற்றுக்கிழமையில் நடைபெற்று வந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம் கடந்த வாரம் முதல் சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டது. அதன்படி, கடந்த 23-ந்தேதி 6-வது கட்டமாக 50 இடங்களில் நடைபெற்ற மெகா முகாமில் 22.33 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அந்தவகையில் 6 மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் இதுவரை தமிழகத்தில் 1 கோடியே 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

இதுவரை தமிழகத்தில் 60 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். அவர்களை கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். 

இந்நிலையில், 7-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரெயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்றூ வருகிறது.

சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த மெகா தடுப்பூசி முகாம்  காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த முகாமில் தடுப்பூசி செலுத்தாமல் இருக்கிற 60 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Next Story