பள்ளிப்பட்டு நகருக்குள் சாலையை அடைத்தபடி வந்த கரும்பு வாகனத்தால் போக்குவரத்து நெரிசல்


பள்ளிப்பட்டு நகருக்குள் சாலையை அடைத்தபடி வந்த கரும்பு வாகனத்தால் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 30 Oct 2021 11:44 AM IST (Updated: 30 Oct 2021 11:44 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிப்பட்டு நகருக்குள் சாலையை அடைத்தபடி வந்த கரும்பு வாகனத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து நெரிசல்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நகரத்தில் பல அரசு அலுவலகங்கள் தனியார் ஆஸ்பத்திரிகள், அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் அரசு தொடக்கப்பள்ளிகள் உள்ளன.

பள்ளிப்பட்டு நகரை சுற்றி 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் பயிரிடும் கரும்புகளை டிரக்குகளிலும், டிராக்டர்களிலும் ஏற்றி பள்ளிப்பட்டு அருகிலுள்ள ஆந்திர மாநிலம் நெலவாய் கிராமத்தில் இருக்கும் தனியார் கரும்பு ஆலைக்கு எடுத்து செல்கின்றனர்.

இப்படி எடுத்து செல்லும் வாகனங்கள் குறிப்பிட்ட அளவு பாரமுள்ள கரும்புகளை ஏற்றி செல்லாமல், அதிக அளவில் ஏற்றி செல்வது மட்டுமல்லாமல் கரும்பு கட்டுகளை வலது, இடதுபுறம் அதிக அளவில் நீட்டியபடி சாலைகளை அடைத்துக்கொண்டு செல்லும்படி ஏற்றுகின்றனர்.

இந்த வாகனங்கள் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நேரங்களில் பகல் நேரத்தில் பள்ளிப்பட்டு நகருக்குள் நுழைவதால் அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெரிசலால் சிக்கி திணறுகின்றன.

இதில் அவசர சிகிச்சை பெற வரும் நோயாளிகள் சிக்கிக்கொண்டு பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். நேற்று மாலை ஒரு டிராக்டரில் சாலையை அடைத்தபடி கரும்புகளை ஏற்றிக்கொண்டு ஒரு வாகனம் பள்ளிப்பட்டு நகருக்குள் நுழைந்தது. இதனால் இந்த வாகனத்தின் எதிர்புறமும், பின்புறமும் ஏராளமான வாகனங்கள் சிக்கி தவித்தன. இதனால் பள்ளிப்பட்டு நகரம் போக்குவரத்து நெரிசலால் சிக்கி திணறியது. இந்த போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய முடியாமல் பள்ளிப்பட்டு போலீசார் திணறினார்கள்.

கோரிக்கை

இத்தகைய நெரிசலை தவிர்க்க திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பள்ளிப்பட்டு நகருக்குள் பகல் நேரத்தில் கரும்பு பாரங்களை ஏற்றி வரும் வாகனங்களை நகருக்குள் வராமல் ஓரிடத்தில் நிறுத்தி வைத்து அவற்றை இரவு 8 மணிக்கு மேல் பள்ளிப்பட்டு நகருக்குள் செல்ல அனுமதித்தால் இந்த நெரிசலை தவிர்க்கலாம் என்று பள்ளிப்பட்டு நகர மக்கள் தங்கள் கோரிக்கையை தெரிவித்தனர்.

அத்துடன் நில்லாமல் பள்ளிப்பட்டு நகரின் 4 பக்கங்களிலும் அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் நகருக்குள் செல்ல அனுமதிக்கப்படும் என்ற எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டும் என்று நகர மக்கள் கோரிக்கை விடுத்தனர் அத்துடன் நில்லாமல் இந்த எச்சரிக்கையை மீறி நகருக்குள் நுழையும் அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை நடத்தும் டிரைவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


Next Story