ஜெயலலிதாவின் கார் டிரைவர் அய்யப்பனிடம் தனிப்படை விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் கார் டிரைவர் அய்யப்பனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் கார் டிரைவர் அய்யப்பனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடநாடு வழக்கு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017 அன்று காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டதோடு எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. வழக்கில் முழு விசாரணை நடத்தி உண்மைகளை வெளியே கொண்டு வர 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
ஜெயலலிதாவின் கார் டிரைவர்
கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில் நடந்த ஒரு விபத்தில் கனகராஜ்(ஜெயலலிதா கார் டிரைவர்) இறந்தது, மற்றொரு விபத்தில் சயானின் மனைவி மற்றும் மகள் இறந்தது, எஸ்டேட் கணினி ஆபரேட்டர் தற்கொலை செய்தது ஆகிய 3 சம்பவங்கள் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அது தொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கி விட்டதால், வழக்கு சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
இந்தநிலையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கார் டிரைவரான சென்னையை சேர்ந்த அய்யப்பனை போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து உள்ளனர்.
முக்கிய ஆதாரங்கள்
அவரிடம், ஊட்டி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சம்பவத்துக்கு முன்பு உங்களை கனகராஜ் செல்போனில் தொடர்பு கொண்டாரா, அவரது நடவடிக்கையில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏதேனும் ஏற்பட்டதா, வழக்கில் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு உள்ளதா, ஏதேனும் அழுத்தம் தரப்பட்டதா என்பன போன்ற கேள்விகளை எழுப்பி நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் மற்றும் தனிப்படை போலீசார் பதிவு செய்தனர்.
ஜெயலலிதாவின் கார் டிரைவராக அய்யப்பன் 15 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து உள்ளார். இதனால் அவரிடம் இருந்து ரகசிய தகவல்களை பெற்று, முக்கிய ஆதாரங்களை போலீசார் திரட்ட உள்ளதாக தெரிகிறது.
Related Tags :
Next Story