ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட போலீஸ் நிலையம் பராமரிக்கப்படுமா


ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட போலீஸ் நிலையம் பராமரிக்கப்படுமா
x
தினத்தந்தி 30 Oct 2021 8:07 PM IST (Updated: 30 Oct 2021 8:07 PM IST)
t-max-icont-min-icon

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட போலீஸ் நிலையம் பராமரிக்கப்படுமா

வால்பாறை

வால்பாறையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட போலீஸ் நிலையத்தை பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள். 


போலீஸ் நிலையம்

வால்பாறை பகுதியின் மைய பகுதியில் அமைந்துள்ளது பழைய போலீஸ் நிலையம். இந்த போலீஸ் நிலையம் இந்திய சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு, 22.11.1928-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த போலீஸ் நிலையத்திற்கு அருகில் போலீஸ்காரர்கள் குடியிருப்பும் அதற்கு அருகில் போலீசாரின் கவாத்து (ட்ரில்) மைதானமும் உள்ளது. ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையிலும் இந்த மைதானத்தில் போலீ்சாருக்கான ட்ரில் பயிற்சி நடைபெறும். 

வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து மக்களும் போலீசாரின் இந்த பயிற்சியை காண வருவார்கள். மாதந்தோறும் உயர் போலீஸ் அதிகாரிகள் யாராவது ஒருவர் தவறாமல் இந்த போலீஸ் நிலையத்திற்கு வந்து ஆய்வு செய்து விட்டு செல்வார்கள். வால்பாறை பகுதியை பொறுத்தவரை எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாதவாறு சிறப்பாக போலீசார் பணி மேற்கொண்டு வந்தனர். அந்த அளவிற்கு பெருமை வாய்ந்த போலீஸ் நிலையமாக விளங்கியது. 


வால்பாறை நகரில் தற்போது பழமை வாய்ந்த ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடம் என்று சொல்ல வேண்டுமானால் அது 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வால்பாறை அரசு ஆஸ்பத்திரி கட்டிடமும், 93 ஆண்டுகள் பழமையான வால்பாறை போலீஸ் நிலைய கட்டிடமும் தான்.
10.12.2010 அன்று வால்பாறையில் புதிய போலீஸ் நிலையம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதையடுத்து பழமையான போலீஸ் நிலையத்தை கண்டு கொள்ளாமல் விடப்பட்டது. இதனால் போலீஸ் நிலையம் பராமரிப்பின்றி மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது. 

பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் 

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- வால்பாறையில் சுதந்திரம் அடைவதற்கு முன்பு ஆங்கிலேயரால் போலீஸ் நிலையம் கட்டப்பட்டது. இந்த போலீஸ் நிலையம் தற்போது பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது.  வால்பாறை பகுதியில் பழைய நினைவுகளை மக்களுக்கு வெளிப்படுத்தும் பழமை வாய்ந்த கட்டிடங்களை முறையான பராமரிப்பு செய்து பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தலாம். மேலும் வருங்கால சந்ததிகளுக்கு வால்பாறையின் வரலாற்றை நினைவு கூறும் வகையில் இது போன்ற பழமையான நினைவுகளை இது போன்ற கட்டிடங்கள் ஏற்படுத்தும்.


எனவே வால்பாறை பழைய போலீஸ் நிலையத்தை பராமரிப்பு செய்ய வேண்டும். மேலும் அந்த போலீஸ் நிலையத்தை அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அல்லது போலீசாருக்கான உடற்பயிற்சி கூடம், போலீசார் தங்கும் விடுதிகள் அல்லது சிறப்பு படை போலீஸ் பணி மையம் என்று ஏதாவது ஒருவகையில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story