திண்டுக்கல்லில் தீபாவளி பொருட்கள் வாங்க வந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி


திண்டுக்கல்லில் தீபாவளி பொருட்கள் வாங்க வந்தவர்களுக்கு  கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 30 Oct 2021 9:25 PM IST (Updated: 30 Oct 2021 9:25 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் தீபாவளி பொருட்கள் வாங்க வந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஒருசிலர் அசைவ உணவு சாப்பிட முடியாது என பயந்து அறியாமையில் ஒதுங்கினர்.

திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் தீபாவளி பொருட்கள் வாங்க வந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஒருசிலர் அசைவ உணவு சாப்பிட முடியாது என பயந்து அறியாமையில் ஒதுங்கினர்.
கொரோனா தடுப்பூசி 
திண்டுக்கல் மாவட்டத்தில் 100 சதவீத இலக்கை எட்டுவதற்கு, 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது. எனினும் நேற்று முன்தினம் வரை 71 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது. 
இந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் 1,057 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் திண்டுக்கல் மாநகராட்சியில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட முகாம் நடைபெற்றது. இதுமட்டுமின்றி மருத்துவ பணியாளர்களை கொண்ட நடமாடும் குழுக்கள் மூலம் பொதுமக்கள் கூடுகிற இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது.
பொருட்கள் வாங்க வந்தவர்கள்
இதற்கிடையே தீபாவளிக்கு புத்தாடைகள் மற்றும் இதர பொருட்கள் வாங்குவதற்கு திண்டுக்கல்லில் நேற்று ஏராளமான மக்கள் திரண்டனர். இதனால் மெயின்ரோடு, மணிக்கூண்டு, கிழக்குரதவீதி ஆகிய பகுதிகளில் பொருட்கள் வாங்க வந்த மக்களுக்கு நடமாடும் குழுக்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 
இதற்காக சாலையில் சென்ற பொதுமக்களை அழைத்து தடுப்பூசி செலுத்தி விட்டீர்களா? என்று மருத்துவ பணியாளர்கள் விசாரித்தனர். அதில் தடுப்பூசி செலுத்தாத நபர்களில் ஆதார் அட்டை உள்ளிட்ட சான்றுகள் வைத்திருந்த நபர்களுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. 
 52 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
அப்போது ஒரு சிலர் தீபாவளி பண்டிகை என்பதால், அசைவ உணவு சாப்பிட முடியாது, பண்டிகையை கொண்டாட முடியாது என்று கூறி அறியாமையில் பயந்தபடி ஒதுங்கினர். ஆனால் மருத்துவ பணியாளர்களின் விளக்கத்தை கேட்டதும் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி செலுத்த ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சாலையோர கடைக்காரர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்கிடையே நேற்று மெகா முகாம் மூலம் மாவட்டம் முழுவதும் 55 ஆயிரத்து 851 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Next Story