திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 30 Oct 2021 9:50 PM IST (Updated: 30 Oct 2021 9:50 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் குப்பைகள் பிரிக்கும் மையத்தை மாற்றக்கோரி மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் அண்ணாநகர் பகுதியில் மாநகராட்சியின் குப்பைகளை தரம் பிரிக்கும் மையம் உள்ளது. இங்கு குப்பைகளை பிரிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே மையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று அண்ணாநகர் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். 
இந்த நிலையில் அந்த பகுதி பொதுமக்கள் நேற்று மாநகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். மேலும் குப்பைகள் பிரிக்கும் மையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பதாகைகளை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர். 
அந்த மனுவில், அண்ணாநகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. மேலும் ஏராளமான மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூடமும் உள்ளது. அண்ணாநகரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகளை தரம் பிரிக்கும் மையம் உள்ளது. அங்கு குப்பைகளை மொத்தமாக கொண்டு வந்து பிரிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மழைக்காலத்தில் வீடுகளில் கூட மக்கள் வசிக்க முடியவில்லை. இதனால் ஏதேனும் தொற்று நோய் பரவி விடுமோ? என்ற அச்சம் உள்ளது. 
எனவே குப்பைகளை தரம் பிரிக்கும் மையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story