1 முதல் 8-ம் வகுப்பு வரை நாளை பள்ளிகள் திறப்பு-மாணவர்களுக்கு பூ, இனிப்பு கொடுத்து உற்சாக வரவேற்பு; கல்வித்துறை அதிகாரிகள் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை நாளை பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி மாணவர்களுக்கு பூ, இனிப்பு கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி:
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்தப்பட்டன. இதேபோல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டன.
இந்தநிலையில் நாளை (திங்கட்கிழமை) முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நாளை அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனிடையே நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் பூ, இனிப்புகள் கொடுத்து, இன்முகத்துடன் வரவேற்க வேண்டும் என்றும், அவர்களுக்கு விளையாட்டு மற்றும் அறிவுப்பூர்வமான பாடங்களை கற்பிக்க வேண்டும் என்றும் கூறினார்.
உற்சாக வரவேற்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி வகுப்புகள், டேபிள், இருக்கைகள், கழிவறைகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், கிருமிநாசினிகள் தெளிக்கும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை 124 அரசு பள்ளிகளில், 14 ஆயிரத்து 427 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகங்கள், கழிவறைகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்றது.
நீண்ட நாட்கள் கழித்து பள்ளிக்கு வரும் தொடக்கக்கல்வி மாணவ-மாணவிகளுக்கு பூக்கள், இனிப்புகள் கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றனர்.
Related Tags :
Next Story