மண் பாதையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை
மண் பாதையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை
தளி,
காண்டூர் கால்வாயின் கரையில் சேதமடைந்துள்ள மண் பாதையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
குண்டும் குழியுமான பாதை
பி.ஏ.பி.பாசனத்திட்டத்தின் உயிர்நாடியாக திருமூர்த்தி அணை விளங்குகிறது என்றால் அது இன்றளவும் உயிர்ப்போடு உள்ளதற்கு காண்டூர் கால்வாயின் பங்கும் முக்கியமானதாகும். கால்வாய் கட்டப்பட்டபோதே அதை பராமரிப்பதற்கும் நீர் மேலாண்மையை முறைப்படுத்துவதற்கும் மண்பாதை அமைக்கப்பட்டது. அந்த பாதை எண்ணற்ற விவசாயிகளுக்கும் இன்றளவும் உறுதுணையாகவும் இருந்து வருகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நிலத்திற்கு செல்வதற்கு வழி இல்லாமல் வாழ வழியின்றி தவித்துக்கொண்டிருந்த விவசாயிகளுக்கு காண்டூர் கால்வாயின் கரையில் அமைக்கப்பட்ட மண்பாதை மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறது. அதை முறையாக பராமரித்து வருவதற்கும், சேதமடைந்தால் சீரமைப்பதற்கும் அதிகாரிகள் முன்வருவதில்லை. இதனால் அவை குண்டும் குழியுமாக காணப்படுவதுடன் மழைக்காலத்தில் அதில் தண்ணீர் தேங்கி வருகிறது. இதனால் அந்த வழியாகச்செல்லும் வாகனங்கள் நிலை தடுமாறி கால்வாயில் விழுந்து விடும் சூழல் நிலவுகிறது. அப்போது கால்வாயில் தண்ணீர் சென்றால் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்புகள் கூட உள்ளது.
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும் மிக முக்கியமாக பாதை சேமடைந்துள்ளதால் கால்வாயில் தவறி விழுகின்ற வனவிலங்குகளை வனத்துறையினர் விரைந்து சென்று மீட்பதற்கு முடிவதில்லை. இதனால் அவை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்து வருவது வேதனையாக உள்ளது.
அதுமட்டுமின்றி விளைபொருட்களை விற்பனைக்கும், சாகுபடி பணிகளுக்கு தேவையான இடுபொருட்களை வாகனங்களில் கொண்டு செல்வதற்கும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. முறையாக பராமரிக்கப்படாத ஒரு பாதை எண்ணற்ற விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்குவதுடன் கால்வாயில் விழுகின்ற வனவிலங்குகளின் உயிரை காப்பதிலும் தடங்கல்களை ஏற்படுத்தி வருகிறது.
எனவே காண்டூர் கால்வாயின் கரையில் சேதமடைந்துள்ள மண்பாதையை உடனடியாக சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story