பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்துக்கொண்டிருந்த போது தண்ணீரில்மூழ்கிய பள்ளி மாணவி
பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்துக்கொண்டிருந்த போது தண்ணீரில்மூழ்கிய பள்ளி மாணவி
பொங்கலூர்,
பொங்கலூர் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்துக்கொண்டிருந்த போது தண்ணீரில்மூழ்கிய பள்ளி மாணவியை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். 3 சிறுமிகளை ஒரு பெண் தனது சேலையை கழற்றி வீசி காப்பாற்றினார்.
பள்ளி மாணவிகள்
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே கள்ளிப்பாளையம் ஊராட்சி வலையபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் சகுந்தலா தேவி (வயது 14). அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் தங்கமுத்து என்பவரது மகள் சுமதி (13). இவர் அரசு பள்ளியில் 7-ம் படித்து வருகிறார்.
தெய்வசிகாமணி என்பவரது மகள் யோகலட்சுமி (14). இவரும் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் 8-ம் வகுப்பு படிக்கும் இந்திராணி (14). இம்மாணவிகள் 4 பேரும் வலையபாளையத்தை அடுத்த கள்ளிமேட்டுப்பாளையம் என்ற இடத்தில் செல்லும் பி.ஏ.பி. வாய்க்காலில் குளிக்க சென்றனர்.
சேலையை வீசி காப்பாற்றிய பெண்
4 பேரும் அங்கு குளித்துக்கொண்டிருந்தபோது திடீரென அனைவரையும் தண்ணீர் இழுத்து சென்றது. உடனடியாக 4 பேரும் சத்தம் போடவே அருகில் இருந்த வேன் டிரைவர் சொக்கநாதன் (25) என்பவர் ஓடிவந்து 4 மாணவிகளையும் காப்பாற்ற தண்ணீரில் குதித்தார்.
அப்போது சுமதி மற்றும் யோகலட்சுமி, இந்திராணி ஆகிய 3 பேரும் தண்ணீரில் சொக்கநாதனை இறுக்கிப் பிடித்தனர். இதனால் அவரும் தண்ணீரில் மூழ்க தொடங்கினார்.
உடனே அங்கு வந்த சுதா (33) என்ற பெண் அவர்களை கவனித்து, தான் அணிந்திருந்த சேலையை கழற்றி வாய்க்காலில் வீசினார். உடனே அந்த சேலையை சொக்கநாதன் பிடித்துக்கொண்டு 3 சிறுமிகளையும் உயிருடன் மீட்டுக்கொண்டு வெளியே வந்தார்.
ஒரு சிறுமியை தண்ணீர் இழுத்துச்சென்றது
இந்த விபத்தில் சகுந்தலா தேவியை மட்டும் தண்ணீர் இழுத்துச் சென்று விட்டது. இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் போலீசாருடன் இணைந்து சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மாலை வரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story