மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை


மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை
x
தினத்தந்தி 30 Oct 2021 11:04 PM IST (Updated: 30 Oct 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம், 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 26-ந் தேதி தொடங்கியது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழையின் தொடக்கம் முதலே நல்ல மழை பெய்து வருகிறது.மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சாரல் மழையாக நீடித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 3 மணிக்கு தொடங்கிய பலத்த மழை இடைவிடாது விடிய விடிய கொட்டி தீர்த்தது. காலையிலும் பலத்த மழை தொடர்ந்தால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். இடைவிடாது கொட்டி தீர்த்த மழை காரணமாக தாழ்வான பகதிகளை மழைவெள்ளம் சூழ்ந்தது. தெருக்களிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைவெள்ளம் குளம்போல் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
இந்த பலத்த மழை ராமநாதபுரம் பகுதி மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் பெய்ததால் அனைத்து நீர்நிலைகளிலும் மழைநீர் சேர்ந்து வருகிறது. நிலத்தடி நீர் ஆதாரம் உயரத்தொடங்கி உள்ளது. இரவு தொடங்கி இடைவிடாது மழைபெய்த காரணத்தினால் மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு செல்ல முடியாதநிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் சங்கர்லால் குமாவத் உத்தரவிட்டார்.தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து தங்களின் விவசாய பணிகளை மும்முரமாக தொடங்கி உள்ளனர். மழையால் வயல்வெளிகளில் தண்ணீர் தேவையான அளவு மட்டும் வைத்து விட்டு மீதம் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். தாழ்வான பகுதிகளில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள மழைவெள்ள நீரை அந்தந்த பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகைக்கு 4 நாட்களே உள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போதுதான் தீபாவளி பண்டிகை விற்பனை சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் இடைவிடாது பெய்யும் மழையால் தீபாவளி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- ராமநாதபுரம்-52, மண்டபம் -18.4, ராமேசுவரம் 15.2, பாம்பன்-4.4, தங்கச்சிமடம்-3.8, பள்ளமோர்குளம்-32, திருவாடானை-6.8, தீர்த்தாண்டதானம்-5, தொண்டி-2.4, ஆர்.எஸ்.மங்கலம்-4, பரமக்குடி-3, முதுகுளத்தூர்-11, கமுதி-22, கடலாடி-40.2, வாலிநோக்கம்-82. மொத்தம்-305.4, சராசரி-19.09.

Next Story