எட்டயபுரம் சந்தையில் ஆடு விற்பனை மந்தம்


எட்டயபுரம் சந்தையில் ஆடு விற்பனை மந்தம்
x
தினத்தந்தி 30 Oct 2021 11:16 PM IST (Updated: 30 Oct 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

தொடர் மழையால் எட்டயபுரம் சந்தையில் ஆடு விற்பனை மந்தமாக நடந்தது.

எட்டயபுரம்:
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். புகழ்பெற்ற இந்த ஆட்டுச்சந்தைக்கு தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, மதுரை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், கோவை, சென்னை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆடு வாங்குவதற்கு வியாபாரிகள் வருவது வழக்கம். வாரம்தோறும் ரூ.1 கோடி வரையிலும், விழாக்காலங்களில் ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலும் ஆடுகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். 

இந்த நிலையில் வருகிற 4-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று நடந்த ஆட்டுச்சந்தையில் விற்பனை களைகட்டும் என்று ஆடு வளர்ப்பவர்களும், வியாபாரிகளும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் நேற்று முன்தினம் இரவு பெய்த தொடர் சாரல் மழை காரணமாக ஆடு விற்பனையில் மந்தம் ஏற்பட்டது. வழக்கமாக அதிகாலை 5 மணிகள் ஆடுகள் விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று 11 மணிக்குள் விற்பனை முடிவுக்கு வந்து விடும். ஆனால் நேற்று ஆடுகள் விற்பனை வெகுதாமதமாக தான் தொடங்கியது. மாலை வரை விற்பனை நடந்தது. 

வழக்கமாக 10 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்கு வரும் நிலையில் நேற்று 6 ஆயிரத்திற்கும் குறைவான ஆடுகள் தான் விற்பனைக்கு வந்தது. மேலும் ஆடுகளை மிகவும் குறைவான விலைக்கு வியாபாரிகள் கேட்டதால், ஆடுகள் விற்பனை கணிசமாக குறைந்து காணப்பட்டது. பலர் உரிய விலை கிடைக்காததால் ஆடுகளை விற்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

இதுகுறித்து ஆடுகளை விற்க வந்தவர்கள் கூறியதாவது:-
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்ட ஆடு நேற்று ரூ.6 ஆயிரத்துக்கு தான் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. மழை காரணமாக ஆடுகள் விற்பனை மிகவும் மந்தமாக இருந்தது. மேலும் ஆடுகள் மிகவும் குறைவான விலைக்கு கேட்கப்பட்டதால் ஆடுகள் விற்பனை கடந்த ஆண்டு போல் நடைபெறவில்லை. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ.4 கோடி வரை விற்பனை நடைபெற்றது. நேற்று ரூ.1 கோடிக்கு கூட விற்பனை நடைபெறவில்லை.
இவ்வாறு அவர்கள் வேதனையுடன் கூறினர்.

Next Story