மகா தீபத்திற்கு நெய் காணிக்கை வசூலிக்கும் பணி தொடக்கம்


மகா தீபத்திற்கு நெய் காணிக்கை வசூலிக்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 30 Oct 2021 11:34 PM IST (Updated: 30 Oct 2021 11:34 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா தீபத்திற்கு நெய் காணிக்கை வசூலிக்கும் பணி தொடங்கியது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா தீபத்திற்கு நெய் காணிக்கை வசூலிக்கும் பணி தொடங்கியது. 

 நெய் காணிக்கை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ளது. கோவிலில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் முக்கியமானதாகும். 

இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. 

விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் நிகழ்ச்சி வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. 

மகா தீபத்திற்கு பக்தர்கள் நேர்த்தி கடனாக நெய் காணிக்கை செலுத்துவர். தீபத்திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களிடம் நெய் காணிக்கை வசூலிக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக கோவில் வளாகத்தில் 2 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

 உழவார பணி

இதில், நெய் காணிக்கையாக 1 கிலோவிற்கு ரூ.250-ம், அரை கிலோவிற்கு ரூ.150-ம், கால் கிலோவிற்கு ரூ.80-ம் வசூலிக்கப்படுகிறது. 

பக்தர்கள் வழங்கும் நெய் காணிக்கை பணத்திற்கு கோவில் நிர்வாகம் மூலம் ரசீது வழங்கப்படுகிறது. ஆருத்ரா தரிசனம் முடிந்த பிறகு நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள் தங்களின் ரசீதை கோவில் அலுவலகத்தில் காண்பித்து தீப ‘மை’ பெற்றுக் கொள்ளலாம். 

இந்த நிலையில் நேற்று கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தினர்.

மேலும் தீபத்திருவிழாவை முன்னிட்டு நேற்று கோவிலில் மதுரையை சேர்ந்த அன்னை மீனாட்சி உழவார பணி குழு மூலம் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.

Next Story