உறவினர்கள் சாலை மறியல்


உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 30 Oct 2021 11:39 PM IST (Updated: 30 Oct 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற வாலிபர் மர்மமான முறையில் இறந்து விட்டதாக வந்த தகவலையடுத்து அவரது உறவினர்கள் பட்டவர்த்தி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மணல்மேடு:
வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற வாலிபர் மர்மமான முறையில் இறந்து விட்டதாக வந்த தகவலையடுத்து அவரது உறவினர்கள் பட்டவர்த்தி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றவர் 
மணல்மேடு அருகே இளந்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மகன் பிரபாகரன் (வயது 23). குடும்ப வறுமை காரணமாக வெளிநாடு செல்ல நினைத்த பிரபாகரன், மணல்மேடு பகுதியை சேர்ந்த பரணியின் சகோதரர் ராஜா துபாயில் நடத்தி வரும் மாவுமில் நிறுவனத்திற்கு 2019-ம் ஆண்டில் வேலைக்கு சென்றுள்ளார். அங்கு வேலை சுமை அதிகம் இருப்பதாகவும், உணவு அளிப்பதில்லை என்றும் சம்பளம் சரிவர தருவதில்லை என்று அவரது தாயாரிடம் தொலைபேசியில் கூறியுள்ளார். இதனால் ஊருக்கு வந்துவிடும்படி பிரபாகரனின் தாய் கூறியதாக கூறப்படுகிறது.
 இந்த நிலையில் பிரபாகரன் பணியாற்றிய நிறுவனத்தின் உரிமையாளர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொலைபேசி மூலம் பிரபாகரனை காணவில்லை என அவர் வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பின்பு பிரபாகரனும் தொலைபேசியில் வீட்டிற்கு பேசவில்லை என கூறப்படுகிறது. 
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபாகரன் பணியாற்றிய நிறுவனத்தின் உரிமையாளர் மீண்டும் பிரபாகரனின் வீட்டிற்கு தொடர்பு கொண்டு பிரபாகரன் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 
சாலை மறியல்
இதுகுறித்து மணல்மேடு போலீஸ் நிலையத்தில் பிரபாகரனின் குடும்பத்தினர்கள் புகார் அளித்திருந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரனின் உறவினர்களும், கிராம மக்களும் பட்டவர்த்தி சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கவுதம், மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிண்டு வசந்தராஜ், உதவி கலெக்டர் பாலாஜி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 
மே மாதம் காணாமல் போன நபர் குறித்த புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரபாகரனை அழைத்து சென்ற ராஜா மற்றும் பரணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 
3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உத்தரவாதம் அளித்த பிறகு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 
காலை 10.30 மணிக்கு ஆரம்பித்த சாலை மறியல் போராட்டம் மதியம் 1.30 மணி வரை நீடித்தது. இதனால் 3 மணி நேரம் மணல்மேடு- வைத்தீஸ்வரன்கோவில் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story