140 கிலோ கஞ்சா பறிமுதல்


140 கிலோ கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 31 Oct 2021 12:46 AM IST (Updated: 31 Oct 2021 12:46 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் 140 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து பெண் ஒருவரை கைது செய்தனர்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும், ஒரு வீட்டில் கஞ்சா பண்டல், பண்டலாக பதுக்கப்பட்டுள்ளதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
 இந்தநிலையில் திருக்கோகர்ணம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவில்பட்டி பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த பெண் ஒருவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் திருக்கோகர்ணம் பகுதியை சேர்ந்த அய்யப்பனின் மனைவி ஜானகி (வயது40) என்பது தெரியவந்தது. அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனையிட்ட போது அதில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஜானகியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.
140 கிலோ கஞ்சா பறிமுதல்
இதைத்தொடர்ந்து திருக்கோகர்ணம் அபிராமி நகரில் அவரது வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு பண்டல், பண்டலாக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மொத்தம் 138 கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து அவர் பையில் வைத்திருந்த 2 கிலோ கஞ்சா மற்றும் வீட்டில் இருந்த 138 கிலோ என மொத்தம் 140 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன்மதிப்பு ரூ.14 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அவரது கணவர் அய்யப்பன், வினிதா, மதுரையை சேர்ந்த செல்வி, பாலு ஆகிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
எங்கிருந்து கடத்தி வரப்பட்டது
கஞ்சாவை எங்கிருந்து, எப்படி கடத்தி வரப்பட்டது? யாரிடம் இருந்து கஞ்சாவை பெற்றது என்பது உள்ளிட்டவை குறித்து ஜானகியிடம் துருவி, துருவி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைதான ஜானகி மீது ஏற்கனவே 3 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் ஜாமீனில் வெளியே வந்த பின் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Next Story