வேலூர் முழுவதும் விபத்துகள் ஏற்படுத்தும் சாலைகள் அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் மக்கள் அவதி


வேலூர்  முழுவதும் விபத்துகள் ஏற்படுத்தும் சாலைகள் அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் மக்கள் அவதி
x
தினத்தந்தி 31 Oct 2021 12:51 AM IST (Updated: 31 Oct 2021 12:51 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாநகராட்சி முழுவதும் விபத்துகள் ஏற்படுத்தும் சாலைகளால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். பணியை மேற்கொள்வதில் அதிகாரிகள் மெத்தனப்போக்கை கடைபிடிப்பதாக குற்றம்சாட்டுகின்றனர்.

வேலூர்

வேலூர் மாநகராட்சி முழுவதும் விபத்துகள் ஏற்படுத்தும் சாலைகளால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். பணியை மேற்கொள்வதில் அதிகாரிகள் மெத்தனப்போக்கை கடைபிடிப்பதாக குற்றம்சாட்டுகின்றனர்.

அடிப்படை வசதிகள்

வேலூர் மாநகராட்சி நிர்வாக காரணங்களுக்காக 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் சுமார் 6 லட்சம்பேர் வசித்து வருகின்றனர். இவை தவிர ஏராளமான வெளியூர் மக்களும் வந்து செல்லும் இடமாக வேலூர் மாநகராட்சி திகழ்கிறது.
குடிநீர், சுகாதாரம், சாலை போன்ற அடிப்படை வசதிகளை மக்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும். இவை அனைத்தையும் மக்களுக்கு செய்து கொடுப்பதில் வேலூர் மாநகராட்சி நிர்வாகம் தோல்வி அடைந்துவிட்டதாக பொதுமக்கள் எண்ணுகின்றனர். அந்த அளவுக்கு மாநகராட்சியின் செயல்பாடுகள் உள்ளது.
அதிகாரிகளின் அலட்சியப்போக்கு
தற்போது மாநகராட்சியில் முக்கிய பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது சாலை பிரச்சினை. எங்குபார்த்தாலும் குண்டும், குழியுமான சாலைகள். கால்வாய் அமைத்தல், பாதாள சாக்கடை, குடிநீர் வினியோகம் என திட்டங்களை செயல்படுத்துவதாக கூறி மக்களை பாடாய்படுத்துகின்றனர்.

சாலை அமைக்கும்பணி ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. தற்போது வேலூர் மாவட்டத்தில் மழைக்காலம் மாநகராட்சி பகுதிகள் அனைத்தும் சேற்றில் மூழ்கி காணப்படுகிறது. மீட்டெடுக்கும் பொறுப்பில் உள்ள அதிகாரிகளிடம் அலட்சியப்போக்கே காணப்படுகிறது.
விபத்துகள் ஏராளம்

தெருக்கள் எல்லாம் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. ஏராளமான விபத்துகள் நடந்துள்ளது. இதில் பலர் காயமடைந்துள்ளனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சறுக்கி கீழே விழும் நிலை உள்ளது. முதியவர்கள், பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் பெரும் அவதி அடைந்துள்ளனர். இதனால் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பல்வேறு அமைப்பினர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். சாலைகளை சரிசெய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகளிடையே ஒற்றுமை இல்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. உயர் அதிகாரி கூறுவதை பிற அதிகாரிகள் கேட்பதில்லை. இதனால் எந்த அதிகாரியும் எந்த பணியையும் துரிதப்படுத்துவதில்லை என்றும் கூறுகின்றனர்.
சாலைகள் அமைப்பதற்காக ஒப்பந்தம் பெற்றவர்கள் பணியை வேகப்படுத்துவதில்லை. அவர்கள் வேறு சிலருக்கு தங்களது ஒப்பந்தத்தை மாற்றி கொடுத்து விடுகின்றனர். அவர்களும் பணியை மெத்தனபோக்கில் செயல்படுத்துகின்றனர். அதிகாரிகளிடம் முறையிட்டால் அதை கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
வர்த்தகம் பாதிப்பு

மாநகராட்சியில் முக்கிய வணிக தலமாக திகழும் மண்டிதெரு, கிருபானந்த வாரியார் சாலை, காந்திரோடு, சைதாப்பேட்டை, நேதாஜி மார்க்கெட் பகுதிகளில் உள்ள தெருக்கள் தோண்டப்பட்டு பணிகள் முடிக்கப்படாமல் பாதியிலேயே விடப்பட்டது போன்று காணப்படுகிறது.

மோசமான சாலைகளால் தீபாவளி பண்டிகை வியாபாரம் இல்லாமல் வணிகர்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனால் வேலூர் மாவட்டத்தில் பலகோடி ரூபாய்க்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வணிகர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், வேலூர் நகரில் முக்கிய வியாபார பகுதிகளில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் அந்த கடைகளுக்கு பொருட்கள் கொண்டு செல்ல முடியவில்லை. மேலும் அந்த கடைகளுக்கு மக்களும் செல்வதில்லை. இதனால் வியாபாரத்தில் பெரும் இழப்பை சந்திக்கின்றனர். சாலைகளை சீரமைக்கக்கோரி வியாபாரிகள் கோரிக்கை வைத்தும் மாநகராட்சி அதிகாரிகள் செவி சாய்க்காமல் இருக்கின்றனர் என்றனர்.


Next Story