கும்மிடிப்பூண்டி-ரெட்டம்பேடு சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலப்பதால் பொதுமக்கள் அவதி
கும்மிடிப்பூண்டி-ரெட்டம்பேடு சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து குளமாக தேங்கி இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜாரில் இருந்து ரெட்டம்பேடு செல்லும் சாலையில் கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையம், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மகளிர் போலீஸ் நிலையம், கோர்ட்டு, மகளிர் மேல்நிலைப்பள்ளி, பேரூராட்சி அலுவலகம், தீயணைப்பு நிலையம் என பல்வேறு அரசு சார்ந்த பொதுமக்களின் அன்றாட தேவைக்கு உரிய அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
அதே சமயத்தில் இந்த ரெட்டம்பேடு சாலையில் அமைந்துள்ள அனைத்து வீடுகளின் கழிவு நீர், ரெட்டம்பேடு சாலையோரம் உள்ள கால்வாய் வழியாக தான் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய கால்வாய் பணி முழுமையாக முடிவடையாமல் பாதியில் நிறுத்தப்பட்டிருப்பதால் தற்போது கால்வாய்க்கு வந்து சேரும் கழிவுநீர் அனைத்தும் சாலையில் பாய்ந்தோடுகிறது.
தற்போது அந்த பகுதியில் பெய்துவரும் மழையால் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து சாக்கடை போல் காட்சியளிக்கிறது.
துர்நாற்றம் வீசும் இந்த கழிவுநீரை தினமும் கடந்து தான் அந்த பகுதியில் உள்ள அரசு அதிகாரிகளும், பொதுமக்களும் சென்று வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் தங்களது அலுவலகம் செல்லும் வழியில் சுகாதார சீர் கேட்டை விளைவிக்கும் வகையில் சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரையாவது முதல்கட்டமாக அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
Related Tags :
Next Story