ஓமலூரில் வளையல் கடைக்காரர் கழுத்தை நெரித்துக்கொலை-தாய், மகன் கைது
ஓமலூரில் வளையல் கடைக்காரரை கழுத்தை நெரித்துக்கொலை செய்த தாய், மகனை போலீசார் கைது செய்தனர்.
ஓமலூர்:
ஓமலூரில் வளையல் கடைக்காரரை கழுத்தை நெரித்துக்கொலை செய்த தாய், மகனை போலீசார் கைது செய்தனர்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
வளையல் கடைக்காரர்
சேலம் மாவட்டம் ஓமலூர் பேரூராட்சி 15-வது வார்டு ஆசிரியர் நகர் கள்ளிக்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 55). இவர் ஓமலூர் பஸ் நிலையத்தில் வளையல் கடை நடத்தி வந்தார். இவரது கடைக்கு பக்கத்து கடையில் ஆட்டுக்காரனூர் பகுதியை சேர்ந்த சுகுணா (51) என்பவரும் வளையல் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் வியாபாரம் சம்பந்தமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணி, சுகுணாவின் கடை முன்பு சிறுநீர் கழித்ததாக தெரிகிறது. இதனை சுகுணா தட்டிக்கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அருகில் இருந்த சுகுணாவின் மகன் சந்தோஷ் கதிர்வேல் (28) தகராறில் ஈடுபட்டார்.
கழுத்தை நெரித்தார்
மேலும் அவர் ஆத்திரத்தில், சுப்பிரமணியின் கழுத்தை நெரித்து பிடித்து தூக்கி உள்ளார். இதில் அவரது கழுத்து எலும்புகள் உடைந்ததாக தெரிகிறது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் விலக்கி விடவே சுப்பிரமணியை சந்தோஷ் கதிர்வேல் விட்டார். இதனிடையே கழுத்தை நெரித்ததால் அங்கே சுப்பிரமணி சுருண்டு விழுந்தார்.
உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே சுப்பிரமணி ரத்த வாந்தி எடுத்துள்ளார். மேலும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார்.
தாய், மகன் கைது
இதுபற்றி தகவல் அறிந்த ஓமலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கீதா, இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுகுணா, அவரது மகன் சந்தோஷ் கதிர்வேல் ஆகியோரை கைது செய்தனர்.
ஓமலூர் பஸ் நிலையத்தில் கடை முன்பு சிறுநீர் கழித்த தகராறில் வளையல் கடைக்காரர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story