புனித் ராஜ்குமாரின் இறுதி ஊர்வலத்தையொட்டி பெங்களூருவில் அதிவிரைவுப்படை பாதுகாப்பு
புனித் ராஜ்குமாரின் இறுதி சடங்கு மற்றும் ஊர்வலம் நடைபெறுவதையொட்டி பெங்களூருவில் அதிவிரைவுப்படை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
பெங்களூரு:
இறுதி சடங்கு, ஊர்வலம்
கன்னட திரையுலகில் பிரபல நடிகரான புனித் ராஜ்குமார் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணியில் இருந்து 10.30 மணிக்குள் புனித் ராஜ்குமாரின் இறுதி சடங்கு கன்டீரவா ஸ்டூடியோவில் நடைபெற இருக்கிறது.
இதற்காக இன்று காலை 6 மணியில் இருந்து கன்டீரவா மைதானத்தில் இருந்து மைசூரு வங்கி சர்க்கிள், சாளுக்கியா சர்க்கிள், சாங்கி ரோடு, யூ.ஆர். ராவ் ஜங்ஷன், யஷ்வந்தபுரம், கொரகுன்டே பாளையா வழியாக கன்டீரவா ஸ்டூடியோவுக்கு புனித் ராஜ்குமாரின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு இறுதி சடங்கு நடைபெற உள்ளது.
அதிவிரைவுப்படை பாதுகாப்பு
இதையொட்டி பெங்களூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, 3 கம்பெனி அதிவிரைவுப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 90 பிளட்டூன் கர்நாடக ஆயுதப்படை போலீசார், 20 நகர ஆயுதப்படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக புனித் ராஜ்குமார் உடல் எடுத்து செல்லப்படும் முக்கிய சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
பெங்களூரு போலீசாருடன், பிற மாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். ஒட்டு மொத்தமாக 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக பெங்களூரு நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
Related Tags :
Next Story