7-வது கட்ட மெகா சிறப்பு முகாம்: 56,377 பேருக்கு கொரோனா தடுப்பூசி
சேலம் மாவட்டத்தில் நேற்று நடந்த 7-வது கட்ட மெகா சிறப்பு முகாமில் 56 ஆயிரத்து 377 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று நடந்த 7-வது கட்ட மெகா சிறப்பு முகாமில் 56 ஆயிரத்து 377 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தடுப்பூசி முகாம்
சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பல்வேறு கட்டங்களாக தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட 6 மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 3 லட்சத்து 35 ஆயிரத்து 862 பேருக்கு முதல் தவணையும், 2 லட்சத்து 38 ஆயிரத்து 918 பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாவட்டம் முழுவதும் உள்ள 1,392 மையங்களில் 7-வது கட்ட தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமில், ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்த இந்த முகாமில் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். மேலும், சுகாதாரத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள், தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர். ஆனால் சில மையங்களில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வராததால் வெறிச்சோடி காணப்பட்டன. அதேசமயம், பெரும்பாலான மையங்களில் இரண்டாம் தவணை தடுப்பூசி போட வந்தவர்கள் அதிகமாக காணப்பட்டனர்.
கலெக்டர் ஆய்வு
மாவட்டத்தில் சில இடங்களில் தடுப்பூசி போடும் பணியை மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கொரோனா தடுப்பூசியை இதுவரை போடாமல் இருக்கும் நபர்களை கண்டறிந்து விரைவில் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளமாறு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
நேற்று நடந்த மெகா முகாமில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 56 ஆயிரத்து 377 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மாநகராட்சி
சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி மெகா முகாம் நடந்தது. இந்த மையங்களில் தடுப்பூசி போடும் பணியை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதேசமயம், மாநகராட்சி பகுதிகளில் உள்ள மையங்களில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட வந்தவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு அவர்களில் 10 பேருக்கு ஒருவர் வீதம் தேர்வு செய்து பரிசு வழங்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story