அன்னதானப்பட்டியில் பரிகார பூஜைகள் செய்வதாக கூறி பெண்ணிடம் 8½ பவுன் நகை அபேஸ்-மந்திரவாதிக்கு போலீசார் வலைவீச்சு


அன்னதானப்பட்டியில் பரிகார பூஜைகள் செய்வதாக கூறி பெண்ணிடம் 8½ பவுன் நகை அபேஸ்-மந்திரவாதிக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 31 Oct 2021 2:56 AM IST (Updated: 31 Oct 2021 2:56 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அன்னதானப்பட்டியில் பரிகார பூஜைகள் செய்வதாக கூறி பெண்ணிடம் 8½ பவுன் நகையை அபேஸ் செய்த மந்திரவாதியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அன்னதானப்பட்டி:
சேலம் அன்னதானப்பட்டியில் பரிகார பூஜைகள் செய்வதாக கூறி பெண்ணிடம் 8½ பவுன் நகையை அபேஸ் செய்த மந்திரவாதியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வியாபாரி மனைவி
சேலம் அன்னதானப்பட்டி, லைன்மேடு, புது திருச்சி கிளை ரோடு பகுதியை சேர்ந்தவர் அன்வர். வியாபாரி. இவருடைய மனைவி வஹீதா (வயது 55). சம்பவத்தன்று வஹீதாவை அணுகிய மர்ம நபர், தான் மந்திரவாதி என்றும், உங்கள் வீட்டில் பிரச்சினைகள் சூழ்ந்து உள்ளன. அவற்றை நான் சிறப்பு பரிகார பூஜைகள் செய்து விரட்டுகிறேன். இதனால் தொழில் பெருகி லாபம் அடைவீர்கள், உங்கள் குடும்பம் மிகுந்த சந்தோஷமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய வஹீதா அந்த நபரை வீட்டிற்குள் பூஜை செய்ய வரச்சொல்லியுள்ளார். இதையடுத்து அந்த நபர் பரிகார பூஜைகள் செய்வதற்காக வீட்டில் இருக்கும் நகைகளை கொண்டு வந்து ஒரு தட்டில் வைக்கும்படி கூறி இருக்கிறார். அதனை நடுவீட்டில் வைத்து பூைஜகள் செய்தால், நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும், தொழிலில் பணம் கொட்டும் என்று வஹீதாவிடம் தெரிவித்துள்ளார்.
நகைகள் திருட்டு
இதனை நம்பிய வஹீதா வீட்டில் இருந்த தனது 8½ பவுன் நகைகளை அந்த மந்திரவாதியிடம் கொடுத்துள்ளார். அதை வைத்து பரிகார பூஜைகள் செய்த பிறகு அந்த நபர் வீட்டில் இருந்து கிளம்பி சென்றுவிட்டார். மேலும் தட்டில் வைத்திருந்த நகைகளையும் காணவில்லை. இதை கண்டு வஹீதா அதிர்ச்சி அடைந்தார். 
நூதன முறையில் நகைகளை மந்திரவாதி திருடிச்சென்றது குறித்து வஹீதா அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணிடம் இருந்த 8½ பவுன் நகைகளை அபேஸ் செய்த மந்திரவாதியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story