தஞ்சை மாநகரில் களை கட்டிய தீபாவளி விற்பனை


தஞ்சை மாநகரில் களை கட்டிய தீபாவளி விற்பனை
x
தினத்தந்தி 31 Oct 2021 3:08 AM IST (Updated: 31 Oct 2021 3:08 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாநகரில் தீபாவளி விற்பனை களை கட்டியுள்ளது. பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டத்தால் கடை வீதிகள் திக்குமுக்காடின.

தஞ்சாவூர்
தஞ்சை மாநகரில் தீபாவளி விற்பனை களை கட்டியுள்ளது. பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டத்தால் கடை வீதிகள்  திக்குமுக்காடின.
தீபாவளி பண்டிகை
இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை தினத்தன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிவார்கள். பின்னர் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
தீபாவளிக்கு புத்தாடை, பட்டாசுகள் வாங்குவதற்காக கடந்த சில நாட்களாக கிராமப்பகுதிகளில் இருந்து மக்கள் தஞ்சை மாநகரை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் துணிக்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தஞ்சை மாநகரில் நேற்று தீபாவளி விற்பனை களை கட்டியது.
மக்கள் கூட்டம்
தஞ்சை தெற்குவீதி, கீழராஜவீதி, காந்திஜிசாலை, கீழவாசல் செல்லும் சாலைகளில் உள்ள துணிக்கடைகளில் புத்தாடை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. தங்களுக்கு பிடித்த கடைகளுக்கு சென்று கலர், கலரான வண்ணமயமான துணிமணிகளை வாங்கி கொண்டு மக்கள் உற்சாகமாக சென்றனர்.
அதேபோல் பட்டாசு கடைகள், சுவீட் கடைகளிலும் மக்கள் அதிகஅளவில் கூடியிருந்தனர். சிறுவர்கள் தங்களுக்கு விருப்பமான பட்டாசுகளை வாங்கி சென்றனர். தஞ்சை அண்ணாசாலை, காந்திஜிசாலையில் அமைக்கப்பட்டிருந்த தரைக்கடைகளிலும் துணிமணிகள் வாங்குவதற்கு கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் காந்திஜிசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்களில் செல்பவர்கள் நத்தையை போல் மெதுவாக தான் செல்ல முடிந்தது.
ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு
துணிமணிகள் வாங்குவதற்காக கார்களில் வந்தவர்களில் சிலர், ஜி.ஏ.கெனால் ரோடு, பழைய நீதிமன்ற சாலையோரத்தில் நிறுத்திவிட்டு சென்றதால் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். கூட்டநெரிசலை பயன்படுத்தி திருடர்கள் பணம், நகையை திருடிச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக மக்களிடையே ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் போலீசாரும் ஆங்காங்கே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story