பெண் ஆய்வாளர் உள்பட 10 பேர் மீது வழக்கு


பெண் ஆய்வாளர் உள்பட 10 பேர் மீது வழக்கு
x

தக்கலை அருகே உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையை தொடர்ந்து பெண் ஆய்வாளர் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பத்மநாபபுரம்:
தக்கலை அருகே உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையை தொடர்ந்து பெண் ஆய்வாளர் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
வட்டார போக்குவரத்து அலுவலகம்
தக்கலை அருகே கோழிப்போர்விளையில் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு பீட்டர்பால்துரை தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சிவசங்கரி, ரெமா, பென்ஜமீன் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் அதன் அருகே டிரைவிங் லைசென்சுக்காக ஆன்லைன் பதிவு செய்யும் அலுவலகம் மற்றும் கடைகளில் இந்த சோதனை நடந்தது.
முத்திரை, ஆவணங்கள்
அப்போது வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் முத்திரைகள் மற்றும் அலுவலகத்தில் இருக்க வேண்டிய முக்கிய ஆவணங்கள் லைசென்சுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் அலுவலகம் மற்றும் அருகில் உள்ள கடைகளில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
மேலும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லைசென்சு எடுப்பவர்களுக்கு புகைப்படம் எடுக்கும் பிரிவில் இருந்த தனியார் புகைப்பட கலைஞர் ஜான் லூயிசிடம் ரூ.3 ஆயிரத்து 200 உள்பட புரோக்கர்களிடம் இருந்தும் மொத்தம் ரூ.1 லட்சத்து 86 ஆயிரத்து 610 பறிமுதல் செய்யப்பட்டது. அவ்வளவு பணம் எப்படி வந்தது என்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
10 பேர் மீது வழக்கு
இந்த அதிரடி சோதனையை தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருக்க வேண்டிய முத்திரை மற்றும் முக்கிய ஆவணங்கள் வெளியே சென்றதால், வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் பத்மபிரியா, வட்டார போக்குவரத்து அதிகாரியின் பி.ஏ. விஜயலட்சுமி, ஜான் லூயிஸ் மற்றும் புரோக்கர்கள் ஆன்றோ சகாய ஜெபின், செந்தில், வடிவேல், ஜான், செல்வம், மதன், தினேஷ் ஆகிய 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story