மது வாங்க வந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி


மது வாங்க வந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 31 Oct 2021 3:41 AM IST (Updated: 31 Oct 2021 3:41 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் மது வாங்க வந்தவர்களுக்கு நேற்று சுகாதார பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் மது வாங்க வந்தவர்களுக்கு நேற்று சுகாதார பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.
சிறப்பு முகாம்
கொத்து, கொத்தாக உயிர்களை காவு வாங்கிய கொரோனா என்ற நோய்த்தொற்று மக்களுக்கு அனைத்து விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த நோய்த்தொற்றுக்கு குமரி மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கு 20-க்குள்ளாகவே இருந்து வருகிறது.
இது ஒருபுறமிருக்க குமரி மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் இந்த நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா நோய்த்தொற்றால் பெருமளவு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும், இறப்புகளை தவிர்க்கவும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 
இந்தநிலையில் நேற்று தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மாவட்டம் முழுவதும் 565 இடங்களில் நடைபெற்றது. இந்த முகாம்களின் ஒரு பகுதியாக சுகாதாரத்துறையினர் டாஸ்மாக் கடைகள் அருகில் நின்றும் தடுப்பூசி போடும் பணியை நேற்று மேற்கொண்டனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் பரபரப்பு நிலவியது.
மதுபிரியர்களுக்கு தடுப்பூசி
மருத்துவ அதிகாரி பிலிப் தலைமையில், சுகாதார மேற்பார்வையாளர் ஜெயக்குமார், சுகாதார ஆய்வாளர் மதன், செவிலியர்கள் ராஜேஸ்வரி, சுகிர்தா ஆகியோரும், போலீசாரும் அடங்கிய ஒரு குழுவினர் நேற்று ராஜாக்கமங்கலம், ஆலங்கோட்டை, கன்னங்குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மது வாங்க வருபவர்களை விசாரித்து தடுப்பூசி செலுத்தினர்.
ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்க வந்த 4 பேரும், ஆலங்கோட்டை பகுதியில் உள்ள மதுக்கடைக்கு மது வாங்க வந்த 2 பேருக்கும், கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது வாங்க வந்த 4 பேருக்கும் என மொத்தம் 10 பேருக்கு அவர்களிடம் இருந்து அடையாள அட்டைகளை பெற்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் கடை ஊழியர்கள் 2 பேரும் அடங்குவர். 10 பேரில் சிலர் முதல் கட்டமாகவும், சிலர் 2-வது கட்டமாகவும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
ஒரே நாளில்...
இதேபோல் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் மொத்தம் 46,803 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அவர்களில் நாகர்கோவில் நகரில் மட்டும் 5, 800 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 
நேற்று முன்தினம் வரை குமரி மாவட்டத்தில் 14 லட்சத்து 78 ஆயிரத்து 684 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story