‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வெளிச்சம் கிடைத்தது
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், பார்த்தசாரதி தெருவில் மின்விளக்குகள் எரிவது இல்லை என்று ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து அங்கு புதிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டு மீண்டும் வெளிச்சம் கிடைத்துள்ளது.
இடையூறாக இருந்த கம்பம் அகற்றம்
சென்னை மந்தவெளிப்பாக்கம் டிரஸ்ட் கிராஸ் தெருவில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பாதசாரிகளுக்கு இடையூறாக கிடந்த கம்பம், தினத்தந்தி புகார் பெட்டி செய்தியால் உடனடியாக அகற்றப்பட்டது.
கோவில் அருகே குப்பைகூளம்; பக்தர்கள் மனவேதனை
சென்னை வில்லிவாக்கம் சுரங்கப்பாதை அருகே ரெயில் நிலையம் செல்லும் சர்வீஸ் சாலை குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது. அருகே கோவில் இருந்தும் அந்த பகுதி சுகாதார சீர்கேடாக இருக்கிறது. புகார் அளித்தால் சம்பிரதாய நடவடிக்கைகள் மட்டும் எடுக்கப்படுகிறது. தீர்வு கிடைப்பது இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்ற எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.
-பக்தர்கள்.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
சென்னையை அடுத்த பம்மல் 17-வது வார்டுக்குட்பட்ட விஜயாநகர் விவேகாநந்தர் முதல் தெருவில் பாதாள சாக்கடை மூடியில் ஏற்பட்டிருக்கும் பழுது காரணமாக கழிவுநீர் தேங்கி இருக்கிறது. நீண்ட நாட்களாக இப்பிரச்சினை நிலவுகிறது. இதுகுறித்து பம்மல் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தேங்கியுள்ள கழிவுநீர் பல நோய்களுக்கும் காரணமாக அமைந்து வருகிறது. நடவடிக்கை எடுக்கப்படுமா?
- ஆர்.கோபால், பம்மல்.
மின் இணைப்பு பெட்டி வருமா?
சென்னை வேளச்சேரி டி.என்.எச்.பி. 14-வது தெருவில் உள்ள ஒரு வீட்டின் முன்பு ஒரு வருடத்துக்கும் மேலாக மின் கேபிள்கள் தரையில் புதைந்த நிலையிலேயே இருக்கின்றன. இதுவரை இங்கே மின் இணைப்பு பெட்டி வைக்கப்படவே இல்லை. அதேவேளை குறிப்பிட்ட அந்த வீட்டருகே உள்ள மின்கம்பமும் மோசமான நிலையில் காட்சி தருகிறது.
- இ.சுப்பிரமணி, வேளச்சேரி.
2 ஆண்டாக பயன்படுத்த முடியாத சாலை
சென்னையை அடுத்த வானுவம்பேட்டையில் உள்ள சிதம்பரனார் சாலை 2 ஆண்டுகளாக எவ்வித காரணமுமின்றி தடுப்புகள் கொண்டு மூடப்பட்டுள்ளது. இந்த மெயின் ரோடு மூடப்பட்டிருப்பதால் இணைப்பு சாலைகளை தான் இப்பகுதி வாகன ஓட்டிகள் பயன்படுத்தும்படி இருக்கிறது. எனவே இந்த மெயின் ரோட்டை மறுபடியும் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுமா?
- ராஜேந்திரன், வாணுவம்பேட்டை.
பழுதான நிலையில் மின்கம்பம்
சென்னை எருக்கஞ்சேரி கிருஷ்ணமூர்த்தி சாலையில் (மாநகராட்சி அலுவலகம் அருகே) உள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்து விழும் நிலையில் இருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் பயந்து போயிருக்கிறார்கள். இந்த மின்கம்பத்தை பராமரிக்கவும், தேவை இருப்பின் புதிய மின்கம்பம் வைக்கவோ மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- பொதுமக்கள், எருக்கஞ்சேரி.
திறந்த நிலையில் பாதாள சாக்கடை
சென்னை சூளை மெயின் ரோடு மற்றும் வி.வி.கோவில் தெரு சந்திக்கும் பகுதியில் பாதாள சாக்கடை திறந்த நிலையில் இருக்கிறது. தற்போது அங்கே தடுப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. இருந்தாலும் இதை உடனடியாக சரிசெய்தால் மட்டுமே தேவையற்ற விபத்துகள் நடைபெறுவது தவிர்க்கப்படும்.
சுரேஷ்பாபு, சூளை.
மாநகர பஸ் பழுது
பூந்தமல்லி-தாம்பரம் (வழித்தட எண்-66) மாநர பஸ் TN 01 N-8527 பழுதடைந்திருக்கிறது. பயணிகள் அமரும் இருக்கை கீழ் பகுதி உறுதித்தன்மை இல்லாமல் இருக்கிறது. மிகவும் சிரமப்பட்டு டிரைவர் இந்த பஸ்சை இயக்குவதை பார்க்க முடிகிறது.
- பயணிகள்.
சர்வீஸ் சாலையில் குப்பை கூளங்கள்
மதுரவாயல் (ஏரிக்கரை) முதல் மதுரவாயல் சுங்க சாவடி பைபாஸ் சாலையை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலை குப்பை கூளமாக இருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்கிறபோது வாகன ஓட்டிகள் வழுக்கி கீழே விழும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றி, இனிமேல் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை பலகை வைத்தால் எங்களை போன்ற வாகன் ஓட்டிகளுக்கு நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
-தண்டபாணி, மதுரவாயல்
மழைநீர் அகற்றப்படுமா?
திருவள்ளுர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சிக்கு உள்பட்ட நும்பல் 8வது வார்டு கண்ணபிரான் தெருவில் மழை நீர் நீண்ட நாட்களாக தேங்கி குட்டை போன்று காட்சி அளிக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ?
- என்.கே.குணபதி, திருவேற்காடு.
நாய்கள் தொல்லை
செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் விஜயலட்சுமி. தெரு, வ.வு.சி. தெரு, அண்ணா தெரு, அம்பேத்கர் தெரு, கலைமகள் தெரு போன்ற தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகம் இருக்கிறது. எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மு.ரவிக்குமார், பெருங்களத்தூர்.
மின் அழுத்த பிரச்சினை
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள தென்னேரி கிராமத்தில் மின் அழுத்த குறைப்பாடு நிலவுகிறது. இதனால் வீட்டு உபயோக சாதனங்கள் அடிக்கடி பழுதாகி, பணவிரயம் ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் 3 பேஸ் மின்வயர்கள் மாற்றிட மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆர்.ஜெயச்சந்திரன், தென்னேரி கிராமம்.
Related Tags :
Next Story