கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 12 படுக்கைகளுடன் தீக்காய சிறப்பு சிகிச்சை வார்டு


கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 12 படுக்கைகளுடன் தீக்காய சிறப்பு சிகிச்சை வார்டு
x
தினத்தந்தி 31 Oct 2021 9:45 AM IST (Updated: 31 Oct 2021 9:45 AM IST)
t-max-icont-min-icon

கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீபாவளி பண்டிகையையொட்டி 12 படுக்கைகளுடன் கூடிய தீக்காய சிறப்பு சிகிச்சை வார்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிக்கும்போது எதிர்பாராமல் ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளிக்க கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு தீக்காய சிகிச்சை வார்டு அமைக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு 12 படுக்கைகளுடன் சிறப்பு தீக்காய வார்டு அமைக்கப்பட்டுள்ளன. 

இது குறித்து ஆஸ்பத்திரி ‘டீன்’ டாக்டர் சாந்திமலர் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகையையொட்டி எதிர்பாராமல் ஏற்படும் தீக்காயத்துக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு தீக்காய வார்டு அமைத்துள்ளோம். இந்த சிறப்பு தீக்காய வார்டு 24 மணி நேரமும் முழுமையாக செயல்படும். கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் உள்ள தீக்காய சிகிச்சை வார்டு ஏற்கனவே 70 படுக்கைகளுடன் செயல்பட்டு வருகிறது.

தீக்காய சிகிச்சை வார்டு

தற்போது இந்த சிறப்பு தீக்காய வார்டு ஏற்படுத்தப்பட்டு கூடுதலாக 12 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு தீக்காய வார்டில், தீக்காய சிகிச்சை துறை தலைவர் டாக்டர் ரமாதேவி தலைமையில், 22 டாக்டர்கள், 21 நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள். தீக்காய சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையின்போது தீ விபத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. எனவே கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையின்போது குழந்தைகள் பெற்றோர் கண்காணிப்பில் பட்டாசு வெடிக்க வேண்டும்.

பருத்தி ஆடைகள் அணிய வேண்டும்

மிகவும் இறுக்கம் இல்லாத பருத்தி ஆடைகள் உடுத்தி, செருப்பு அணிந்து பட்டாசு வெடிக்க வேண்டும். தீக்காயம் ஏதும் ஏற்பட்டால் தண்ணீரால் காயத்தை கழுவியபின், சுத்தமான பருத்தி துணியை வைத்து சுற்றி அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறவேண்டும். தீக்காயம் ஏற்பட்ட உடனே அதன்மீது வீட்டில் உள்ள எண்ணெய், காபி தூள், மஞ்சள் தூள், பேனா மை உள்ளிட்டவைகளை தடவக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story