வாலாஜாபாத் ஒன்றியத்தில் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ள அரசு பள்ளி கட்டிடம்
வாலாஜாபாத் ஒன்றியத்தில் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ள அரசு புதிய பள்ளி கட்டிடத்தை விரைந்து திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு வையாவூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம், வையாவூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பள்ளி கடந்த 2006-ம் ஆண்டு முதல் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
இந்த பள்ளியில் வையாவூர், நல்லூர், ஓழையூர், களியனூர், உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தரம் உயர்த்தப்பட்டு போதிய இடவசதி இல்லாமல் செயல்பட்டு வந்த இந்த பள்ளிக்கு புதிய பள்ளி கட்டிடம் கட்டி தரவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் சமூக பாதுகாப்பு திட்ட நிதியில் ரூ.1 கோடியே 75 லட்சம் செலவில் புதிய பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
மின் விளக்குகள், மின்விசிறிகள், நவீன கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாக தயராக உள்ள நிலையில் கொரானா தொற்று காரணமாக திறக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் வரும் 1-ந்தேதி முதல் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளும் செயல்பட தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இநத நிலையில் வடகிழக்கு பருவ மழையும் தொடங்கும் நிலையில் பழைய பள்ளி கட்டிடத்தில் இடவசதியும் இல்லாத காரணத்தால் மாணவ- மாணவிகள் அவதிப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது என்றும், அதனால் கட்டி முடிக்கப்பட்ட புதிய பள்ளி கட்டிடத்தை விரைந்து திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு வையாவூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story